மஞ்சள் ரோஜா




"நீ வருவாய் என நீ வரும் பாதையில்....

விழி வைத்து காத்து  இருக்கிறோம்..

நானும் என்னுடைய காதலும்...",


காலையில் பேருந்து நிலையத்தில் பைரவி எப்போது வருவாள் என்று தவிப்புடன் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டு இருந்த போது விக்ரம் மனம் எழுதிய கவிதையை  டைரியில் கவிதை எழுதி கொண்டு இருந்தான்.
முன்பக்கம் டைரியின் பக்கங்களை புரட்டினான்,

"நான் வைத்த செடியில் இன்று பூத்த
மஞ்சள் நிற ரோஜாவை காணவில்லை...
அட! அதோ நடந்து வருகிறதே..."

என்று நேற்று பைரவி மஞ்சள் நிற சுடிதார் அணிந்து சென்ற போது அவன் மனம் எழுதிய கவிதை. அதற்கு மேல் அவளுடைய நினைவை அவனால் தாங்க முடிய வில்லை.பைரவி.....!!!! அழகான பெயர்...உன்னை போலவே... என்று 
எண்ணிக் கொண்டு, எழுந்து மொட்டை மாடியில் சுவரில் கையை ஊன்றி கொண்டு எதிரில் இருந்த வீட்டின் மாடியை பார்த்தான். அங்கு பேச்சும் சிரிப்பும் களை கட்டி கொண்டு இருந்தது.
திரும்பவும் டைரியை எடுத்தவன், 

"ஏழு ஸ்வரங்களாக உன் சிரிப்பு சத்தம் ஒலிக்க, 
ஆயிரம் பேர் சுற்றி இருந்தும், 
உன் சிரிப்பு சத்தத்தை மட்டும்....
 என் மனம் கண்டுபிடித்த மாயம் என்ன?"

என்று அவன் எழுதி முடிப்பதற்குள்
சடாரென்று அவன் கைகளில் இருந்த டைரி காணாமல் போனது.

பிரகாஷ் நின்று கொண்டு இருந்தான்.

"டேய்,  கவிஞரே..நீ இன்னும் திருந்தவே மாட்டியா? இரண்டு வருஷமா ஒன்சைடாவே அவளை காதலித்து பைத்தியம் மாதிரி இதோட ஐந்து டைரி முழுக்க கவிதை எழுதி வச்சி இருக்க....மனசில் இருக்கிறதை அவகிட்ட சொல்லாம இப்படியே நீ எழுதி கொண்டே இரு, அவ ஒரு நாள் வேற ஒருத்தவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போக போற",

"ஆனா, வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அப்படினு போயி கிட்டு இருக்குற காலத்தில் நீ மட்டும் தான் டா  இன்னும் டைரியில் கவிதை எழுதிக் கிட்டு திரியுற", "அம்மா நேத்து ஃபோன் பண்ணி ஒரே அழுகை, அவன் எதுக்கு இப்படி இருக்கான், எங்களுக்கும் வயசாகுதில? நீயே சொல்லுப்பா, எந்த பொண்ணை பார்த்தாலும் புடிக்கல்லைனு சொல்கிறான், நீ அவன் கிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லுப்பா", அப்படினு ஒரே அழுகை," ஏண்டா, இப்படி அம்மாவை அழ வைக்கிற?
என்று கூறி தலையில் அடித்துக் கொண்டான்.

"ஆமா, அவங்களுக்கு வேற வேலை இல்லை, எப்போ பார்த்தாலும் கல்யாணம் பண்ணனும்ட்டு",

"ஓகோ, அப்போ இந்த வயதில் இருக்குற உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற கடமை செய்யாம, வேற என்ன செய்வாங்க? சரி, உன் பேச்சுக்கே வருவோம், அவங்க இருக்கிற நிலைக்கு,நீ ஒரு பொண்ணை காதல் செய்தால் கூட உனக்கு அவளை திருமணம் செய்து வைத்துடுவாங்க போல, ஆனா, சார் தான் இன்னும் ரோஜா பூ தொட்டியில் வளர்த்து, கவிதை எழுதி, இரண்டு வருடமாக காதல் சொல்லுகிறாராமாம்", என்றான் பிரகாஷ்.

"எனக்கும் ஆசை தான்டா, ஆனால் அவளை பார்த்தாலே எனக்கு எதோ பண்ணுதுடா..கை,கால் நடுங்குது, நானும் சொல்லலாம்னு அவ கிட்ட போனால் எனக்கு அவ கிட்ட போயி பேச தைரியம் வர மாட்டுது",

"ஆமா, நீ தைரியம் வரலனு சொல்லிகிட்டு இரு, அடுத்த வாரம் அவளுக்கு செமஸ்டர் ஆரம்பிக்க போதாம், அது முடிந்த உடனே வீட்டை காலி பண்ணிவிட்டு அவள் ஊருக்கு போயிடுவாளம், ஜெனிபர் சொன்னாள்", என்றான் பிரகாஷ்.

ஜெனிபர் அவனின் அத்தை மகள், காதலி, பாண்டிச்சேரியை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ், திருச்சியில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்கிறான், அவனுடன்  அதே வங்கியில் வேலை செய்பவன் தான் விக்ரம், மதுரையை பூர்வீகமாக கொண்ட விக்ரம், சொத்துக்களும், நிலபுலன்கள் உடைய பணக்காரர் இராஜேந்திரனின் ஒரே மகன், "பரம்பரை சொத்தில் உக்கார்ந்து சாப்பிட எனக்கு விருப்பம் இல்லை, அதை எல்லாம் நீங்கள் பாருங்கள்", என்று சொல்லிவிட்டு வங்கி அதிகாரி பணிக்கு படித்து, தேர்வு எழுதினான்,  திருச்சியில் உள்ள ஒரு பிரபல  வங்கியில் வேலை கிடைக்க, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி வந்தான், அப்போது பணியிடத்தில் பிரகாஷ் உடன் நட்பாகி இருவரும் ஒரு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

பிரகாஷ் மீதுள்ள காதலில் மேற்படிப்பு படிக்க போகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஜெனிபரும் திருச்சிக்கு வந்து விட்டாள், அவன் தங்கி இருக்கும் அறைக்கு எதிரில் உள்ள ஒரு வீட்டில் அவளும், அவளின் தோழி மூன்று பேர்களுடன் சேர்ந்து தங்கி உள்ளார், அதில் ஒருத்தி தான் பைரவி, ஜெனிபரின் தோழியின் தோழி மூலம் அவளுக்கு அறிமுகமாகி, இப்போது அவளுடன் அறையில் தங்கி உள்ளாள்.

பைரவிவை அவளுக்கு மிகவும் பிடிக்கும், அமைதியும் அடக்கமும் நிறைந்தவள், யாரிடமும் அதிகமாக பேச மாட்டாள், மெல்லிய குரல் உடையவள், தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பாள், அவள் மனதில் நினைப்பதை வெளியே கொட்டி விட மாட்டாள், எதை கேட்டாலும் சிறிய புன்னகையை பதிலாக தந்து கடந்து விடுவாள். 

அழகு சாதன பொருட்கள் போடாமலே மின்னும் அழகு முகம் அவளுடையது, "பையூ, நாலாம் பார்லர் போயி முகத்தை அழகு பண்ணினா, உனக்கு எங்கையும் போகாமலே அழகு முகம் அமைந்து இருக்குடி, நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா? நான் மட்டும் ஆம்பளையா பொறந்து இருந்தா உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்", என்று கண் சிமிட்டி சிரிப்பாள் ஜெனிபர்.

அதற்கும் பதில் சொல்லாமல் சிரிப்பாள் அமைதியாக பைரவி.
அழகான பல்வரிசை தெரிய சிரிப்பவளை ரசித்து கொண்டே ஜெனிபர் சொல்லுவாள்.

"தான் அழகா இருக்கேனு சொன்ன உடனே  அதை உணராம  சாதாரணமா அடக்கமாக எடுத்துகிறீல, அதுதான் உனக்கு இன்னும் அழகு சேர்க்கிறது", அதான் அந்த விக்ரம் முழுக் கவிஞராவே மாறிட்டான்",

விக்ரம் பேச்சை எடுத்த உடன் பைரவி முகம் மாறி அங்கிருந்து நகர எத்தனிப்பாள், அன்றும் அதே போல அவள் நகர முற்பட, ஜெனிபர் அவளின் கைகளை பிடித்து தடுத்தாள்.

"பையூ , காதல் என்பது உன் மனசு சம்பந்த பட்ட  தனிப்பட்ட விஷயம், அதில் எனக்கு கருத்து சொல்ல உரிமை இல்லை, இருந்தாலும் உன் தோழி என்ற முறையிலும் இத்தனை நாட்கள் நாம் பழகி இருக்கிறோம் அப்படிங்கற உரிமையில் இதை சொல்ல ஆசை படுறேன்,"விக்ரம் உன் மேல உயிரையே வைத்து இருக்கிறார், இந்த இரண்டு வருடங்களாக உன்னை உயிருக்கு உயிராக காதலித்தாலும், உன்னை பார்த்த உடன் அவர் மனதிலும், உடலிலும் சொல்ல தெரியாத எதோ செய்கிறதாம், உன்னை பார்த்தால் மட்டும் தான் வார்த்தைகளை மறந்து போய், வாயில் இருந்து காற்று தான் வருகிறதாம், பாரேன், அவர் எந்த அளவுக்கு அதிகமாக உன் மேல் காதல், அவரு அப்பா, அம்மாக்கு ஒரே பையனாம், நிறைய சொத்து கூட ஊரில்.....", என்று அவள் முடிக்கும் முன்பே,"போதும் பிளீஸ் ஜெனி", என்று கூறிவிட்டு கடகட வென்று மாடிப்படியில் ஏறி, அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டாள் பைரவி.

அன்று மாலை தனக்காக கல்லூரி வாசலில் காத்துக் கொண்டு நின்ற பிரகாசிடம் பேசிக் கொண்டு ஜெனிபர் நின்றபோது, அங்கு வந்து சேர்ந்தான் விக்ரம்.

முகத்தில் தவிப்புடன், "என்னங்க சொன்னாங்க உங்க பிரண்டு?",
என்றான்.

ஜெனிபர்க்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது, "அந்த பிடிவாதகாரி பிடியே கொடுக்க மாட்டேங்கிறா..எப்ப உங்களை பத்தி பேசினாலும் ஏதும் சொல்லாமல் கல் போல் முகத்தை கடினமாக வைத்துக் கொண்டு, இதை பத்தி என்கிட்ட பேசாத ஜெனி பிளீஸ்", என்று கூறிக் கொண்டு நான் சொல்லி முடிப்பதற்குள் அவள் அகன்று விடுகிறாள் என்று சொல்ல அவளுக்கு விக்ரம் தவிப்பை பார்த்த பின் தயக்கமாக இருந்தது.

அவளின் முகம் மாற்றத்தை துல்லியமாக கணித்த பிரகாஷ், உடனே புரிந்துக் கொண்டான்.

"டேய், விக்ரம்..அவளை மறந்துறது உனக்கு நல்லது டா, அவள் சுத்தமா உன்னை பத்தி எதாவது வார்த்தை சொன்னா கூட கேக்க மாட்டெங்கிறாளம், உன்னை பிடிக்காத பொண்ணு கூட எப்படிடா நீ லைஃப் லாங் வாழுவ?, சொல்லு, அதும் இந்த இரண்டு வருடங்களில் அவள் கிட்ட ஏதாச்சும் பேசி, அட்லீஸ்ட் உன் காதலை யாச்சும் சொல்லி இருந்தா கூட அவள் உன்னை பத்தி ஏதாச்சும் நினைத்து இருப்பாள், அதும் இல்லை, இன்னும் இரண்டு நாட்களில் அவள் பரிட்சை முடிந்து ஊருக்கு போய் விடுவாள், இதுக்கு அப்புறம் அவளை நீ நினைத்தாலும் பார்க்க முடியாது, அதிலும் பாரேன், அவள் போன செமஸ்டர் எக்ஸாம் எழுதி முடிப்பதற்குள் அவங்க வீட்டில் நாலைந்து மாப்பிள்ளைகள் பார்த்து விட்டார்களாம்", அவங்க வீட்டில் அவங்க அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட்டாம், அவரை மீறி ஒரு முடிவு கூட இவ எடுக்க மாட்டாளாம், இப்போ இந்த பெண்  படிப்பை முடித்து விட்டு போனால் கண்டிப்பா டும் டும் தானாம்....", என்று அவன் முடிப்பதற்கு முன்பு,.

"சும்மா இருங்க பிரகாஷ்", என்று ஜெனிபர் அவனை தடுக்க முயல,

"நீ அமைதியா இரு ஜெனிபர், சும்மா, அவளையே நினைத்து பைத்தியம் மாறி பண்ணிகிட்டு இருக்கான்,அதான் உண்மையை சொல்லிட்டா, அவளை மறந்துட்டு, வேற வேலையை பார்ப்பான்ல",

"அவர், இரண்டு வருடமா அவளை உயிருக்கு உயிரா காதலிக்கிறார், இதுல அவர்கிட்ட அவருக்கு நேராகவே, பையூக்கு கல்யாணம், அப்படினுலாம்  சொல்லுகிரீரங்களே அவர் மனசு என்ன பாடுபடும்", என்றாள் ஜெனிபர்.

"கஷ்ட படுத்தும் உண்மைகளை உடனுக்கு உடன் தெரிந்து கொண்டு விட்டால் அந்த கஷ்டத்தையும், வலியையும் அந்த நேரத்திலே அனுபவச்சிட்டு தூக்கி போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போயிடனும் ஜெனி, அதை விட்டுட்டு, கானல் நீர் போல் தெரியிற கற்பனையில் எவ்ளோ நாள் வாழ முடியும், நீயே சொல்லு?
உண்மை தெரிந்து வரும் வலியை விட, கற்பனையில் கோட்டை கட்டி வாழும் போது, அந்த கோட்டை இடிந்து விழும் போது வரும் வலி தான் தாங்க முடியாமல் காலம் முழுக்க மனதை உறுத்தி கொண்டே இருக்கும் ஜெனி,என்று கூறிவிட்டு,

"டேய், நீ அவளை மறந்து விடுறது தான் உனக்கு நல்லது", என்று பிரகாஷ் முடிக்க, நிலை குலைந்து போய் நின்றான் விக்ரம்.

மாடியில் பித்து பிடித்தவன் போல எதிரில் உள்ள மாடியை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான், " அப்படி என்றால் இன்னும் இரண்டு நாட்களில் அவள் போய் விடுவாளா!!, என் காதல் அவ்ளோ தானா?, என்று நினைத்து மனம் குமுறினான்.
மாடியில் தென்னம் கீற்றுக்களில் இருந்து தென்றலாய் வந்து காற்று அவன் முகத்தில் அறைந்து கொண்டு இருந்தது, அவன் மனம் அதில் சிறிது அமைதி அடைந்தது, சற்று தொலைவில், அவன் தொட்டியில் வைத்து வளர்த்துக் கொண்டு இருக்கும் மஞ்சள் ரோஜா  மொட்டு வெடித்து, சிறு செடி முழுவதும், மொட்டும் பூவும் பூத்து குலுங்கி இருந்தது. அதை பார்த்து அதன் அருகில் சென்று அதில் அடர்ந்து  ஒரு மஞ்சள் நிற தாமரை போல மலர்ந்து இருந்த ரோஜாவை பறித்தான் விக்ரம்.

போன வாரம், அவன் பேருந்து நிலையத்தில் எப்போதும் அவள் வரும் நேரத்திற்கு அவளை எதிர்பார்த்து  நின்று கொண்டு இருந்த போது, அவளை காணவில்லை, எங்கே போயிருப்பாள்...?, அவ காலேஜ் முடிச்சி வர டைம் தானே இது..என்று அவள் வரும் பகுதியில் இருந்து வரும் ஒவ்வொரு பேருந்துகள் வரும் போது எட்டி பார்த்தான், அவளை காணவில்லை, தவித்து போனான்.
அவனின் தவிப்பை பார்த்த அருகில் உள்ள அந்த டீக்கடை கடைகாரர், "தம்பி, அந்த காலேஜ் இருக்குற ஊரில் இருந்து வர்ற கடைசி பஸ் இது தான்", இனிமே நாளைக்கு தான் பஸ்", என்றார்.

"அப்போ அவ எங்கே போயிருப்பாள்?",என்று அவன்  தவித்து போய் தலையில் கை வைத்து  வழியில்அப்படியே நின்று விட, மறுபடியும் டீக்கடை கடைகாரர் குரல் இடையிட்டது,

"தம்பி, அந்த பொண்ணுக்கு செத்த வழி விடுப்பா", என்றதும்,

"சாரி, சாரி", என்று அவன் நகர முற்பட, அங்கு பைரவி நின்று கொண்டு இருந்தாள், அவன் கண்களில் ஆனந்தத்தில் கண்ணீர் கலங்க, அதை துடைப்பது போல, அவளின் அந்த மஞ்சள் நிற சுடிதார் துப்பட்டா அவன் முகத்தை உரசி சென்றது.

ஆனந்தத்தில் பேச்சு வராமல் திக்கி சிலை போல நின்றான்.
அவள் தன் வழக்கப்படி குனிந்த தலை நிமிராமல் அமைதியாக போய் விட, தன் கண்ணில் இருந்து மறையும் வரை, அவளை பார்த்துக் கொண்டே நின்றான்.
அப்போது, அங்கு சைக்கி்ளில் ஒரு வியாபாரி செடிகள் விற்று வந்து கொண்டு இருந்தார்.

அந்த மாலை ஆறு மணி வேளையில் அங்கு பேருந்து நிலையத்தில் யாரும் இல்லை, தன் வண்டியை நிறுத்தியவர், 

"ஒரு டீ", என்று சொல்லி விட்டு,

"இன்னைக்கி எல்லாத்தையும் வித்துட்டேன் அண்ணாமலை, இந்த ஒரு செடி மட்டும் விற்பனை ஆகல,இது மட்டும் தான் இருக்கு", அதும் இது ஒட்டு கன்னு, தண்ணி ஊத்தி பூக்க ஆரம்பிச்சிட்டுனா பூ ஒண்ணும் ஒண்ணும் தாமரை பூ மாதிரி இருக்கும்,  வச்சி ஒரு வார த்துக்குள்ள சின்ன கன்னுலயே அவ்ளோ மொட்டு வெடித்து பூத்துக் கொண்டே இருக்கும் அண்ணாமலை, ஆனா தொட்டி ஒரு பக்கம் உடைந்து இருக்குறதால யாரும் வாங்கிக்க மாட்டகிறாங்க" என்று வருத்தத்துடன் அந்த  அண்ணாமலை எனும் பெயருடைய டீக்கடை காரரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

அதைக் கேட்ட விக்ரம் கண்கள் அவரின் வண்டியை நோக்கி திரும்பின.

அதில், ஒரு சிறு தொட்டியில், அதிலும் ஒரு பகுதி இடிந்து போய் மண் பாதி சரிந்து வேர் பிய்ந்து தொங்கி கொண்டு, தாமரை பூ போல ஒரு மஞ்சள் நிற ரோஜா மலர்ந்து இருந்து அவனை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தது.

அதை பார்த்த உடன், சற்று முன்பு பார்த்த பைரவியின் முகமும், அவளின் மஞ்சள் நிற சுடிதார் துப்பட்டா நினைவு வர்ற, அந்த ரோஜா செடியை வாங்கி சென்றான்.

அவனது கையில் ரோஜா செடியை பார்த்த பிரகாஷ், "டேய், என்னடா இது, அதும் இந்த செடியை பார்த்தால் பிழைக்காது போல, வேர் எல்லாம் இப்படி தெரியுது, உன் கண்ணுக்கு நல்ல செடியே கிடைக்கலையா?", என்றான்.

விக்ரம், அவன் அந்த செடியை வாங்கியதற்கான காரணத்தை சொல்ல, தலையில் அடித்தபடி சென்றான் பிரகாஷ்.

அந்த ரோஜா செடி தான் இப்போது பூத்து குலுங்கி கொண்டு இருந்தது.
அதை எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தவன் மனது, இன்னும் இரண்டு நாட்களில் அவள்  படிப்பு முடிந்து ஊருக்கு சென்று விடுவாள், என்று நினைத்ததும் அவளிடம் சொல்லி இருக்கலாமோ தன் காதலை என்று தன் மீது கோபம் வந்து ச்சே என்று கையை சுவற்றில் குத்தினான், அதில் அவன் கையில் வைத்து இருந்த ரோஜா தவறி கீழே தரையில் விழுந்தது.

இது போல தான் என்னுடைய காதலின் நிலையா...அவள் கை நழுவி போய் விடுவாளா???

சொல்லாத என் காதல் என்னை
படுத்தும்  போராட்டத்தில்...
நான் அவளை தொலைத்தேன்?
மீள்வேனா... நான்..

என்று கவிதை எழுதி அதற்கு மேல் எழுத முடியாமல் எழுந்து எதிரில் உள்ள மாடியை வெறித்து பார்த்துக் கொண்டு நின்றான்.
எத்தனை நேரம் அப்படி நின்று இருந்தானோ தெரியவில்லை, அவன் தோளில் ஒரு கை விழ, திரும்பி பார்த்தான் பிரகாஷ் கையில் டைரியுடன் நின்று கொண்டு இருந்தான்.

"இப்படி எழுதினால் எல்லாம் சரியா போய்விடுமா...அவளை மறப்பது தான் உனக்கு நல்லது", 

"இல்லை, நான் அவளிடம் நாளைக்கு என் காதலை சொல்ல போகிறேன்...சொல்லாமலே என் காதல் முடிந்து போய் விட கூடாது", என்று உறுதியாக விக்ரம் கூறி விட்டு சென்றான்.

அடுத்த நாள் காலை, அவள் வழக்கம் போல் நிற்கும் பேருந்து நிலையத்தில் அவள் நின்று கொண்டு இருந்தாள், அப்போது அவளை பார்த்த உடன் அவனுக்கு கை நடுங்கியது, எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று அவன் அவள் அருகே சென்று பேச முற்படும் போது, ஒரு கார் அவள் அருகில் வந்து நின்றது. அதில் இருந்து ஒருவர் இறங்கினார், அவரை பார்த்த உடன், 

"அப்பா...நீங்க எங்க இங்க..",என்று ஆச்சிரிய பட்ட படி, அருகே சென்று காரில் ஏறி சென்று விட்டாள் பைரவி.
ஏதும் சொல்ல முடியாமல் வாயடைத்து போய் நின்றான் விக்ரம்.

அந்த நாள் மாலையில், தன் பொருட்களை எடுத்துக் கொண்டு தன் தந்தையுடன் காரில் ஏறி சென்றாள் பைரவி.

சன்னல் வழியே கார் போன திசையை மனம் வலிக்க பார்த்துக் கொண்டே நின்ற விக்ரம் மனம், நேற்று பிரகாஷ் சொன்னதை நினைத்துக் கொண்டது.

"பைரவியின் அம்மாவும் அப்பாவும் தன் நெருங்கிய சொந்தம் ஒருவரின் திருமணத்திற்கு வந்து இங்கு சென்னையில் தங்கி இருக்கிறாங்கலாம், இன்னும் ஒரே எக்சாம் மட்டும் தான் அவளுக்கு, அதனால் அதை முடிச்சிட்டு அப்படியே ஊருக்கு போயிடுவாளாம்,என்று ஜெனிபர் சொன்னாள்டா", அவனை பார்த்துக் கொண்டே வந்த பிரகாஷ்,

"டேய், உன்னால  இன்னகிக்கும் காதலை சொல்ல முடியல ....மறந்து விடு அவளை, இங்க இருந்தால் அவளை நினைத்துக் கொண்டு இருப்பாய்...பேசாமல் நீ உன் சொந்த ஊருக்கே ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடு", என்றான்.

விக்ரம் மனதில் கூட அது சரி என்று தோன்றியது.

இரு வாரங்கள் கழித்து...

நாட்கள் ஓடினாலும் அவனால் அவளை மறக்க முடியவில்லை.
அவன் அந்த எதிர் வீட்டை கண்களில் ஏக்கத்துடன் மனம் வலிக்க பார்த்தான்.
அவளின் நினைவுகளில் இருந்து வெளியே வர முயன்று தோற்றான்.
அவனின் ஃபோன் ஒலிக்க, எடுத்து பார்த்தான், அவனின் அம்மா தான் அழைத்து இருந்தாள்.

"டேய், விக்ரம்....அந்த திண்டுக்கல்காரங்க கிட்ட நான் பேசிட்டேன், எப்போ பொண்ணு பாக்க வரீங்க ஃபோன் அடிச்சி கிட்டே இருக்காங்கடா, என்னடா சொல்ல?",என்று அவனின் தாய் பத்மா கேட்டாள்.

" எனக்கு இப்போ கல்யாணம் வேணாம், இது சம்பந்தமா என்கிட்ட ஏதும் பேசாதமா", 

"சரிடா...அந்த பொண்ணு வேணாம், இப்போ புதுசா தேனியில் இருந்து ஒரு பொண்ணு ஃபோட்டோ வந்து இருக்கு, பொண்ணு ரதி மாறி இருக்காள், அன்னக்கி நம்ம பவி வீட்டுக்கு போயிட்டு கோவிலுக்கு போனேன்ல அப்போ பார்த்தேன் டா அவளை...எனக்கு அவளை ரொம்ப புடிச்சி போச்சுடா.. பொருத்தமா இருப்பாடா...அவங்க வீட்டுல பேசவா?",

"அம்மா...பிளீஸ்,..விடு இந்த பேச்சை", என்று மறுமுனையில் பதில் பேசுவதற்குள் போனை வைத்தான்.

சிறிது நேரத்தில் உள்ளே இருந்து பிரகாஷ் வந்தான், " உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்குறடா...அம்மா, எப்படி வருத்தபடுறாங்க தெரியுமா?"
என்றவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் எதிர் வீட்டை விக்ரம் பார்த்துக் கொண்டே இருக்க, அதை பார்த்த  பிரகாஷ், உடனே போனை எடுத்து, "அம்மா, பிரகாஷ் பேசுகிறேன், நீங்க எதோ இப்போ புதுசா வரன் வந்து இருக்குனு சொன்னீங்களே...அந்த பொண்ணை பார்க்க வர இவன் ஒத்துக்கிட்டான், என்னது....இதோ ஆன் பண்ணுகிறேன்..என்ற படி ஸ்பீக்கரை போனில் ஆன் செய்தான்.

"அப்பா, பிரகாஷ், நீ சொன்னது உண்மையோ, பொய்யோனு எனக்கு தெரியாது, ஆனால், இந்த பொண்ணு எங்களுக்கு ரொம்ப புடிச்சி போயிடுச்சி..இந்த பொண்ணையும் அவன் மறுத்தானா, எங்களை அம்மா, அப்பானு கூப்பிட கூடாது...என் பிணத்தில் கூட விழிக்க கூடாது...", என்றாள்.

விக்ரம் பதறி போனவனாக, "அம்மா என்னமா இப்படிலாம் பேசுறீங்க!!!!",


"பின்ன என்னடா?", "உனக்காக நாங்க பொண்ணு பார்த்து, பிடிச்சி, மாப்பிளை அழைத்த விட்டு வரேன் அப்படி சொல்லிட்டு வந்தா, நீ  வராம எங்க கழுத்த அறுப்ப.. பொண்ணு வீட்டு காரங்க..எங்களல காறி துப்புறாங்க...இது மாறி இனிமே எங்களால் அசிங்க பட முடியாது, நீ உண்மையிலேயே எங்க மேல் மரியாதை வைத்து இருந்தால் இந்த வார இறுதியில் ஊருக்கு புறப்பட்டு வா", என்றபடி அவன் பதில் பேசும் முன்பு போனை கட் செய்தாள் பத்மா.

தலைக் குனிந்த படி அமர்ந்து இருந்தான் விக்ரம். அவன் எதிரில், நிறைய தட்டுகளில் பழங்கள், பூக்கள், இனிப்புகள் பரப்பி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு தட்டில் அவன் வைக்கப்பட்டு இருந்த மஞ்சள் நிற ரோஜா பூக்கள் அவனுக்கு பைரவியை நினைவு படுத்தியது, 

அவனின் கண்கள் கலங்க, "பொண்ணிடம் தனியாக பேசணும்னு சொல்லி தனியா அழைத்து நான் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன், அடுத்த வாரம் அவள் வீட்டிற்கு சென்று இது பற்றி பேச போகிறேன்..சோ நீ என்னை நிலை கண்டு புரிந்து என்னை பிடிக்கவில்லை அப்படினு சொல்லிடேன்", என்று சொல்ல வேண்டும் என தான் செய்ய முடிவு எடுத்து இருக்கும் இரு முடிவுகளையும் மனதில் நினைத்துக் கொண்டான்.

மீண்டும் அந்த தட்டில் உள்ள மஞ்சள் ரோஜாவை ஏக்கத்துடன் பார்த்தான்.

"பொண்ணு வருது, எம்புட்டு அழகு...ஆத்தி...",
என்று குரல் கேட்க, முகத்தில் எந்த வித உணர்வுகளும் காட்டாமல் விக்ரம் நிமிர்ந்தான்.

அங்கு மஞ்சள் நிற புடவையில், அன்று தான் அவன் வைத்த பூச்செடியில் பூத்த மஞ்சள் ரோஜா போல் கைகளில் காபி தம்ளர் உடன் நின்றுக் கொண்டு பைரவி இருந்தாள்.

"காபி எடுத்துக்கோடா", என்று சிரிப்புடன் அவன் அருகில் அமர்ந்து இருந்த பிரகாஷ் சொல்ல, இன்ப அதிர்ச்சியைசியில் பேச்சு எழாது அமர்ந்து இருந்தான் விக்ரம்.

அவன் காதுக்கு அருகில் சென்று,
" அன்னைக்கு அம்மா என் கிட்ட பைரவி போட்டோ தான் அனுப்புனாங்க... அதனால் தான் நீ ஒரு வாரத்திற்கு பிறகு  வருவ..கண்டிப்பா", அப்படினு சொன்னேன்...ஏண்டா..பைரவி ஊரு தேனினு உனக்கு தெரியாதா?
எப்படி என் சர்பெரைஸ்...", ஈவன் ஜெனி க்கு கூட இந்த மேட்டர் தெரியாது டா", என்று கண் சிமிட்டி சிரித்தான் பிரகாஷ்.

"உன்னை...", என்று பல்லை கடித்தான் விக்ரம்.

"என்னப்பு..மாப்பிளை தம்பி எதுக்கு இப்படி காதில் மந்திரம் ஓதுறாரு?",
என்று கூட்டத்தில் ஒருவர் கேட்க..

"பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் போல் இருக்காம்...", என்று சிரிப்புடன் பிரகாஷ் சொன்னான்.

"அதுக்கு என்னப்பு... தாராளமா பேசிபுட்டா போச்சு..அதுக்கு முன்னாடி பொண்ணை புடிச்சி இருக்கானு சொல்ல சொல்லு..." என்றார் அந்த பெரியவர்.
"
அதெல்லாம் ரொம்ப புடிச்சி இருக்கு...", என்று சட்டென்று விக்ரம் சொல்ல...பத்மா, ராஜேந்திரன் முகத்தில் சந்தோஷம் தாங்க முடியவில்லை.

"அப்படியா மாப்பிளை... அதோ அந்த மொட்டை மாடியில் பேசிபுட்டு வாங்க", என்று ஒருவர் வழிகாட்ட..

மொட்டை மாடியில்...

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவன் தடுமாறி நிற்க...அவள் தன் சேலை முந்தானை நுனியில் தொங்கிய அழகிய நூல் வேலை பாடுகளை கையில் சுற்றி கொண்டும் பிரிப்பதுமாக நின்றாள்.

"பைரவி...நீ எப்படி இங்க, இந்த....", என்று அவன் ஆரம்பிக்க,

"இருந்தாங்க...உங்களுக்கு இதை படித்தால் உங்களுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும்", என்று ஒரு டைரியை அவனிடம் நீட்டினாள்.

வியப்பாக அவன் வாங்கிக் கொண்டான்.
முதல் பக்கத்தை புரட்டினான், அதில் ஐ லவ் யூ விக்ரம்", என்று எழுத பட்டு இருந்தது.

அவன் மனதில் ஆரவாரம் பொங்க, அவள் திரும்பி நடந்து சென்று கொண்டு இருந்தவள் தலையில் அழகான மஞ்சள் நிறத்தில் ரோஜா சிரித்தது, மதுரை மல்லியுடன்.

"ஐ லவ் யூ...என் மஞ்சள் ரோஜாவே... லவ் யூ டி",. என்று கத்தினான், அவள் திரும்பி பார்த்து ஒரு வெட்க புன்னகை செய்து விட்டு உள்ளே ஓடினாள்.

நிச்சயம் வீட்லயே செய்யப்பட்டு திருமண நாள் முடிவு செய்யப்பட்டு 
விட்டது. வீட்டிற்கு வந்து படிக்கும் வரை விக்ரம்க்கு பொறுமை இல்லை, பெற்றோர் மற்றும் உறவினர்களை அனுப்பி வைத்து விட்டு, சாலையிலே வண்டியை நிறுத்தி அவள் கொடுத்த அந்த டைரியை படிக்க ஆரம்பித்தான் விக்ரம்.

இரண்டாம் பக்கத்தை புரட்டினான்.
அதில் அவன் திருச்சியில் முதல் நாள் அவள் தன் தோழிகளுடன் தங்கி இருந்த எதிர் வீட்டிற்கு குடிவந்த முதல் நாள்.

"இன்று தான் அவனை முதல் முதலில் பார்த்தேன்.
காலேஜ் முடிந்து வரும் போது பேருந்து நிலையத்தில் என் தோழிகள் ஒருவனை சைட் அடித்துக் கொண்டு இருந்தார்கள்...யதார்த்தமாக நிமிர்ந்து பார்த்தேன்...அட..இவன் எவ்வளவு அழகா இருக்கிறான்..அது எதனால் என்று தெரியவில்லை, அவனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று மனதில் தோன்றியது", என் பேருந்து வந்து விட்டதால் பிரிய மனமில்லாமல் ஏறினேன். மாடியில் உலாவிக் கொண்டு இருந்தேன், அட...எதிர் வீட்டில் யாரோ குடி வந்து இருக்கிறார்கள் போல, பிரகாஷ் அண்ணா கூட இருப்பது யாரு? அட...இவனா...இவன் எப்படி இங்க குடிவந்தான்...எப்படியோ..
பரவாயில்லை..இவனை தினமும் சைட் அடிக்கலாம்..என்று பார்த்தேன்...அட ஆத்தி, மாடி பக்கம் பார்க்கிறான்..என்று மாடி அறையின் நின்று அவனுக்கே தெரியாமல் அவனை ரசித்தேன்.."

விக்ரம் கண்கள் ஆச்சிரியத்தில்  விரிந்தன, சுவாரசியம் கொண்டு மேலும் பக்கங்களை புரட்டினான்.

"ஒரு வழியாக அவன் பெயர் தெரிந்தது, அவன் பெயர் விக்ரமாம், பேங்கில் வேலை பார்க்கிறான் போல, ஓர் மதுரையாம், பெரிய பணக்கார குடும்பமாம், இவனுக்கு தன் பரம்பரை சொத்தில் உக்கார்ந்து சாப்பிட விருப்பம் இல்லையாம், அதான் பேங்க் ஆபிசராக இருக்கிறானம்",
"இப்போது எல்லாம் அவன் அதிகம் என் கண்களில் தென் பட்டுக் கொண்டே இருக்கிறான், பேருந்து நிலையத்தில் எப்போதும் பார்க்கிறேன் அவனை.
எப்போதும் மாடியில் நின்று நாங்கள் இருக்கும் மாடியை பார்த்துக் கொண்டே இருக்கிறான்...ஒரு வேளை, என் தோழிகளில் யாரையோ காதலிக்கிறானோ?..இதை எழுதும் போதே என்னமோ தெரியவில்லை, என் மனது பாரமாக இருந்தது, அவன் யாரையோ பார்த்து விட்டு போகிறான், உனக்கு என்ன வந்தது என்று என்னால் இருக்க முடியவில்லை, அன்று இரவு அழுதேன், காரணம் தெரியாமல்.."

படித்துக் கொண்டு இருந்த விக்ரம்க்கு பைரவியின் மனது புரிந்தது, உதட்டில் புன்னகை பூக்க, அடுத்த பக்கங்களை புரட்டினான்.

"இன்று அவனை பார்க்க முடியவில்லை, அவனும் பிரகாஷ் அண்ணனும் எதோ ட்ரைனிங்க்காக சென்னை சென்று இருக்கிறாகளாம், ஜெனி சொன்னாள். மனது மிகவும் கஷ்டமாக இருந்தது.

மேலும்  பக்கங்களை புரட்டினான் விக்ரம், அடுத்த இரண்டு நாட்கள் ஏதும் எழுத படவில்லை, ஆனால் அந்த இருபக்கமும், 

நான்..."

என்று எழுத ஆரம்பித்து, அந்த நானும் அவளின் கண்ணீரால் நனைந்து அழிந்து போய் இருந்தது.
அவள் என்ன எழுத முயன்று இருப்பாள் என்று தெரிந்து கொண்ட விக்ரம், அவள் கண்ணீரில் நனைந்து இருந்த அந்த பக்கத்திற்கு முத்தம் குடுத்தான். அடுத்த பக்கத்தை புரட்டினான்.

"இன்று அவன் வந்து விட்டான், சிறிது இளைத்து இருந்தான், எதிர் வீட்டு வாசலில் கார் சத்தம் கேட்வுடன் ஓடி சென்று சன்னல் வழியாக பார்த்தேன், என் மனது சொன்னது உண்மை தான்...அவன் வந்து விட்டான், அது யாரு, அவன் அம்மா போல, அப்பப்பா!!! எவ்ளோ நகை போட்டு இருக்காங்க, அவங்க அப்பா கூட எப்படி இருக்காரு, ஜெனி சொன்னது உண்மை தான் போல, இவங்க பணக்காரங்க போல,",நான் அவன் அளவிற்கு வசதி இல்லை,
எனக்கு என்னமோ தெரியவில்லை, அவனின், அவன் அம்மாவின் தோரணை, பணக்கார தன்மை பார்த்தால் எனக்கு தயக்கமும் பயமும் வந்தது...."

அடுத்த பக்கத்தில்,

"இன்று ஜெனி சொன்னாள், அவன் என்னை காதலிக்கிறான் என்று, நான் நம்பவில்லை, ஆனால் ஜெனி அடித்து சொன்னாள், என் நினைவில் தினமும் அவன் கவிதை எழுதுகிறானாம், என் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது, ஆனால் என் அறிவு, " வேண்டாம் பெண்ணே..அவன் பணக்காரன், நீயோ, மிடில் கிளாஸ், தகுதிக்குமீறி ஆசை படாதே", என்று எச்சரித்ததால், நான் ஜெனியிடம் ஏதும் சொல்லாமல் அமைதியாக வந்து விட்டேன்", என்று எழுதி இருந்தாள் பைரவி..."

அந்த நாட்களை நினைத்து பார்த்த கொண்டே, பக்கங்களை புரட்டினான் விக்ரம்.

"ஆமாம்...ஜெனி சொன்னது உண்மை தான் போல, என்னை பார்ப்பதற்கு என்றே காலை, மாலையில் அவன் பேருந்து நிலையத்தில் நிற்கிறான்....",

அடுத்து அடுத்த பக்கங்களில், அவள் இவ்வாறு எழுதி இருந்தாள்.

"இப்போது எல்லாம் நானும் அவனை தேட ஆரம்பித்து விட்டேன், அவனுக்கே தெரியாமல், அவன் வசதியானவன் என்று என் மனதுக்கு கடிவாளம் போட்டாலும், என் மனம் அவனிடமே போகிறது....",

இன்று அவன் போட்டு இருந்த உடை அவனுக்கு அழகாக இருந்தத்து
"இன்று மாடியில் எதோ தீவிரமாக எழுதிக் கொண்டு இருந்தான்...",

"இன்று பிரகாஷ் அண்ணாவிடம், வாசலில் நின்று சிரித்து  சிரித்து பேசிக் கொண்டு இருந்தான், சிரிக்கும் போது, அவன் முகத்தில் இருந்த ட்ரீம் செய்யப்பட்ட தாடியும் மீசையும் முகத்திற்கு அழகு சேர்த்தது...",

விக்ரம் இதழில் புன்னகை மலர்ந்தது...அடுத்த பக்கங்களை புரட்டினான்,

"இன்று வழக்கம் போல என்னை பார்க்க அவன் பேருந்து நிலையத்தில் வந்து நின்று இருந்தான்,அவனின் தவிப்பை பார்க்க, நான் அவன் நின்றுக் கொண்டு இருந்த டீக்கடை பின்னால் ஒளிந்து கொண்டேன், என்னை காணாமல் அவன் தவித்த தவிப்பை ஒரு கட்டத்திற்கு மேல்  பார்க்க முடியாமல்..வெளியே வந்தேன், அப்போது என் துப்பட்டா அவன் முகத்தில் உரசியது, இப்போது தான் அதை துவைக்க மனம் இல்லாமல், முத்தம் கொடுத்து பீரோவில் வைத்தேன்...",

தூரம் சென்று திரும்பி பார்த்தேன், அட!!, ரோஜா செடி வாங்கி கொண்டு இருக்கிறான், இரவு ஜெனி சொன்னாள், அவன் இன்று நான் அணிந்து இருந்த மஞ்சள்  நிற சுடிதாருக்காக தான் வாங்கு குறானாம்.. இன்றில் இருந்து அதிகம் மஞ்சள் நிற உடைகளே அணிய வேண்டும் என்று தீர்மானித்து கொண்டேன்...",

அடிப்பாவி...எப்படி அலைய விட்டு இருக்காள்", என்று எண்ணிக் கொண்டு மேலும் பக்கங்களை புரட்டினான்.

அடுத்த சில பக்கங்களில் ஊருக்கு சென்று வந்ததையும், அங்கு அவளின் திருமணம் பற்றி அவளின் பெற்றோர் பேசியதையும், அங்கு சென்ற பிறகும் அவன் நினைவு தாக்கியதால், இன்னும் செமஸ்டர் இருக்கிறது என்று பொய் சொல்லி விட்டு திருச்சி வந்துவிட்டேன் என்றும் எழுதி இருந்தாள்.

அடுத்த பக்கத்தில், 

"இன்று தலைவலி என்று மதியமே வந்து விட்டேன், எதிர் வீட்டில் கீழே குடி இருக்கும் ரங்கம் மாமி, வடாம் போட மொட்டை மாடியில் இருந்தார், அவரின் இடியாப்ப அச்சு எங்களிடம் இருந்ததால் அதை குடுக்க அங்கு சென்றேன், அவன் இருக்கும் இரண்டாவது மாடி போர்ஷனை  பார்த்துக் கொண்டே சென்றேன், அந்த மொட்டை மாடியில் இருந்து நான் தினமும் ஒளிந்து நின்று அவனை பார்க்கும் அறையின் சன்னலை பார்த்தேன், இங்கு இருந்து பார்க்கும் போது, அங்கு நான் நிற்பதே தெரியவில்லை, மாமியிடம் சொல்லி விட்டு, கிளம்பி வரும் போது, அந்த ரோஜா செடியில் முதல் பூ மலர்ந்து இருந்தது, யாராவது பார்க்கிறார்களா என்று அக்கம் பக்கம் பார்த்து விட்டு, பறித்து தலையில் வைத்துக் கொண்டேன்.....",

"என்னடா...கடைக்காரன் என்னமோ ஒரே வாரத்தில் இந்த ரோஜா செடி பூத்து குலுங்கும் அப்படினு சொன்னான், இங்க ஒரு பூவுக்கு கூட வழி இல்லை", என்று தான் பிரகாஷ்யிடம் சொல்லி கொண்டு இருந்தது விக்ரம்க்கு நினைவில் வந்தது..."கள்ளி!!!!", என்று மேலும் பார்த்தான்.

"என் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தேதி அறிவித்து விட்டார்கள், மனதில் வலி ஆரம்பித்து விட்டது எனக்கு, அவன் என்னிடம் இன்னும் காதல் சொல்லவில்லை, ஒரு வேளை நான் அழகாக இருக்கிறேன் என்பதால் என் பின்னால் சுற்றுகிறானோ..?, பிறகு ஏன் இன்னும் தன்  காதல் சொல்லவில்லை, அவனை நம்பி நான் எந்த நம்பிக்கையில் காத்து இருக்க?" என்று என் மனம் சோர்ந்து போனது.
மாடியில் உலாவ சென்றேன், வழக்கம் போல் அவன் மாடியில் நின்றான், என் தோழிகள் எதோ சொல்லி சிரிக்க, அந்த ரோஜா செடியை தன் காதலியை பார்த்து வைப்பது போல பார்த்துக் கொண்டு நின்ற அவனை பார்த்து எனக்கு சிரிப்பு வர வேகமாக சிரித்து விட்டேன், உடனே அவன் என் சிரிப்பை கண்டு கொண்டான், சடாரென்று மாடியை பார்த்தான்...கள்ளன்!!!

"பையூ...",என்று டைரியை முத்தமிட்ட படி, மேலும் தொடர்ந்தான் விக்ரம்.

"இன்று அப்பா மற்றும் அம்மா என் கடைசி பரிட்சை அன்று சென்னை திவ்யா சித்தி வீட்டு திருமணத்திற்கு வருகிறார்களாம், அப்படியே என்னையும் ஊருக்கு அழைத்து சென்று விடுவார்களாம், நான் இனிமே அவனை பார்ப்பேனா...எனக்கு அழுகை வருகிறது..."

என்று அவள் கண்ணீர் துளிகளால் அந்த பக்கம் முழுவதும் பேனா மை கரைந்து, அலங்கோலமாக இருந்தது அதும், அடுத்த சில பக்கங்களும்.

"இன்று என் மனம் நாட்கள் குறைய குறைய வேதனை அடைகிறது, அவனுக்கு தெரிந்து விட்டது போல, நான் ஊருக்கு போக போகிறேன் என்று, கடந்த மூன்று நாட்களாக அவன் மாடியியே வெறித்து பார்த்துக் கொண்டே இருக்கிறான். நானும் அவனை சன்னல் வழியே பார்த்தும் ரசித்துக் கொண்டு இருந்தேன்..."

அடுத்த சில நாட்களில் என்ன நடந்தது என்று பரபரப்புடன் பக்கங்களை புரட்டினான் விக்ரம்.

" இன்று ஜெனி என்னிடம் வந்து பேசினாள், அவனுக்காக, எனக்கு இதையெல்லாம் அவன் என்னிடம் நேராக வந்து  ஏன் சொல்ல மாட்டறான்?, என்று எனக்கு கேட்க தோன்றியது, ஆனால், அவள் அடுத்து சொத்து கூட நிறைய என்று ஆரம்பிக்க, என் மனது கடிவாளம் போட்டது, என் தந்தை கண்டிப்பு மிகுந்த வளர்ப்பு ஆகியவற்றை நினைத்து அறைக்குள் சென்று தாழிட்டு அழுதேன்...  "
விக்ரம் மனது பாரம் ஆகியது, அடுத்த பக்கத்தில், ஒரு காய்ந்து போன சற்று பெரியதாக ஒரு ரோஜா பூ இருந்தது.

"ஜெனி சொல்லி இருப்பாள் போல,
அவன் மாடியை வெறித்து பார்த்துக் கொண்டே சோகமாக நின்றான், அவன் கையில் இருந்த மஞ்சள் ரோஜா தவறி கீழே விழுந்தது, அவன் சென்ற பிறகு, நான் ஓடி சென்று எடுத்து, மனம் கசிய அழுதேன், அவன் கையினால் எனக்கு தரப்பட்ட முதல் பூ...

அந்த காய்ந்த ரோஜாவை பார்த்து ரசித்தவன் கண்கள்  அவள் காதல் கண்டு கலங்கியது.

அடுத்த பக்கத்தில்,

"இன்று காலை அவன் என்னருகே வந்து விட்டான், எனக்கு உடல் நடுங்கி எதோ சொல்ல முடியாத உணர்வில் நான் ஆட்பட, என் அப்பா குரல் கேட்டு நிமிர்ந்தேன், என் அப்பா என்னை அழைத்து சென்று விட்டார் காரில்.."

அடுத்தடுத்த பக்கத்தில்...

"எனக்கு அவன் நினைவாகவே இருந்தது, ஒரு வேளை காதல் சொல்ல வந்து இருப்பானோ!!"

என்றும்,

"அப்பா எதோ மாப்பிளை பார்த்து இருக்கிறாராம், சொன்னார், அடுத்த மாதம் பெண் பார்க்க வருகிறார்களாம், எனக்கு பயத்தில் நான் உலர்ந்து விட்டது, அன்று  மாலை, என்னை அந்த வீட்டில் இருந்து அழைத்து போகும் போது, அவன் பார்த்த பார்வை என்னிடம் இருந்த உயிரை யாரோ கிழித்து சென்றது போல் இருந்தது, காரில் ஏறி செல்லும் போது, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வேண்டிக் கொண்டேன்...அவனை எப்படியாவது என்னிடம் சேர்த்து விடு, இதற்கு மேல் எனக்கு திருச்சியில் வேலை இல்லை, அவனுக்கு தேனியில் வேலை இல்லை, அவன் என் வாழ்க்கையில் வருவதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை என்று அறிவு சொன்னாலும், சினிமாவில் வருவது போல், ஏதாவது நடக்காதா...என் காதல் உண்மையானது தானே...அந்த காதலே சேர்த்து வைக்காதா...என்று பைத்தியம் மாறி பலவித எண்ணங்களுடன் வீட்டிற்கு சென்றேன்..."

பரபரப்புடன் அடுத்த பக்கம் புரட்டினான் விக்ரம்.

"நாளை பெண் பார்க்கும் படலம், அப்பா விடம், நான் மேலே படிக்கிறேன், திருமணம் இரண்டு ஆண்டு கழித்து பண்ணிக் கொள்கிறேன் என்றதும் அவரது முறைப்பில் என் பேச்சு அடங்கி போக, அம்மாவிடம் போட்டாவை குடுத்தார், எட்டி பார்த்தேன், என் மயக்கம் வந்து விட்டது, அய்யோ....விக்ரம்!!!!!!!!!
போன மாதம் என்னை சமயபுரம் கோயிலில் விக்ரம் அம்மா பார்தார்களாம், பார்த்த உடன் பிடித்து போய் விட்டதாம், என்னை பற்றி விசாரித்து, என் முகவரி கண்டு பிடிக்க அவர்களுக்கு நிறைய நாட்கள் ஆகி விட்டதாம்", எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை...அவன் வரபோவது தெரிந்து பூக்களோடு மஞ்சள் நிற ரோஜாவும் வாங்கி வர சொன்னேன், என் மனம் கவர்ந்த மஞ்சள் ரோஜாவை ஒரு தாம்பூல தட்டு நிறைய கொட்டி வைத்து தனியாக சிரிப்பதை பார்த்து அம்மா தலையில் அடித்துக் கொண்டார்..."

என்று டைரி முடிந்து இருந்தது. விக்ரம் மனம் நெகிழ்ந்து போயிருந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில், திருமதி.விக்ரமாக ஆனாள் பைரவி.

நான்கு வருடங்கள் கழித்து,

"காலிங் பெல் அடிச்சிட்டு இருக்கு, யாராவது போய் திறங்களேன், நான் கிச்சனில் வேலையா தானே இருக்கேன்?", என்று கையில் கரண்டியுடன் பைரவி வெளியே வர,

ஹாலில், கைகளை தட்டி ஆக்கு பாக்கு, வெத்தலை பாக்கு, விக்ரமுடன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது மேகா, தன் அம்மாவை பார்த்து நாக்கை வெவ் வே காட்டி விட்டு தன் தந்தையுடன் விளையாட்டை தொடர்ந்தது, அதைக் கண்டதும் விக்ரமுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

"என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு, அவளுக்கு நீங்க செல்லம் குடுத்து  கெடுக்கீறிங்க", என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்க இரண்டாவது முறையாக காலிங் பெல் ஒலிக்க, ஓடிச் சென்று கதவை திறந்தாள் பைரவி, அதற்குள் வெளியே ஓடி வந்த மேகா, 

"ஐ...ஜாஸ்மின் பாப்பா", என்று ஜெனிபர் கையில் இருந்த  குழந்தையை கொஞ்ச முயற்சி செய்தது.

"வாங்க பிரகாஷ் அண்ணா...வாடி ஜெனி", என்று இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றாள் பைரவி.

"என்னடா, சொந்த ஊருக்கு ட்ரான்ஸ் பர் வாங்கி இங்க வந்த அப்புறம் எங்களை எல்லாம் மறந்துட்ட போல, அடுத்த வாரம் பாப்பக்கு முதல் பிறந்த நாள் வருதுடா, நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும்டா..
என்றான் பிரகாஷ்

"கண்டிப்பா வருவோம்டா" என்று விக்ரம் பேசிக் கொண்டு இருக்க,  

வாசலில் விக்ரம் மதுரை டிரான்ஸ்பர் கிடைத்ததும், திருச்சியில் அவன் தொட்டியில் வைத்து வளர்த்த மஞ்சள் ரோஜா செடியை அவனும் பைரவியும் சேர்ந்து வாசலில் நட்டார்கள், அது இன்று கொடி போல் உயரே படர்ந்து,  மஞ்சள் நிற சூரியன் தோரணம் கட்டி மொட்டு கட்டி பெரிய மஞ்சள் நிற ரோஜா பூக்கள் பூத்து குலுங்கி கொண்டு இருக்கிறது.

அவர்கள் அனைவரையும் ஒன்றாக கண்ட மகிழ்வுடன் சன்னல் வழியே தன் ரோஜா காற்றை அனுப்பி வைக்க,

என் மனம் கவர்ந்த மஞ்சள் ரோஜாவே....
என் சொர்க்கத்தை இப்போதே...
படைத்து என் கையில் குடுத்து விட்டான்....இறைவன்
உன்னை என் வாழ்வில் அனுப்பி...
இனியவளே.....
என் வாழ்க்கையின்...ஒவ்வொரு படியிலும்...உன் ரோஜா
இதழ் புன்னகை போதுமடி...
நம் வாழ்வை அர்த்தம் பெற வைக்க...

என்று விக்ரம் அன்று காலை எழுதிய கவிதை பக்கம் காற்றில் படப்படத்தது.

- மலர்ந்தது.


Comments

  1. மழையாக வந்தவள் கதையின் அடுத்த பாகம் எப்போது படிக்க முடியும் என்று சொல்லுங்கள் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. பிரதிபலியில் கதை முடிந்த பிறகு இங்கு பதிவிடலாம் என்று இருக்கிறேன் சகோ

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாமரை

குமரி