குமரி

 



20,000 ஆண்டுகளுக்கு முன்பு....
அன்று 1350..
.


கடற்காற்று மெலிதாக வீசி அந்த கடலும் கடல் சார்ந்த பகுதியான நெய்தல் நிலத்தை குளிர்வித்து கொண்டு இருந்தது.

தாழையின் இதழ்கள் மணத்தில் மயங்கி, கீற்றாக வானத்தில் தெரிகின்ற வெண்ணிலாவின் ஒளியில் கருநாகம் தன் இணையுடன் இணையும் நேரம் அது,
தூரத்தில் எங்கோ குதிரை குளம்பொலிகள் கேட்டது, அதில் திடகாத்திரமான உடலுடன், முகத்தில் ஒரு வித கம்பீரத்துடன் புரவியை செலுத்திக் கொண்டு இருந்தான், காற்றில் பறந்த அவன் குழல் முகத்தில் பட்டு அது அவனுக்கு ஒரு வசீகர அழகு தந்தது, கண்கள் இரண்டும் பார்ப்பவர், எதிரில் இருப்பவர் விழியால் துளையிட்டு அவர்கள் மனதில் இருப்பதை கண்டு அறிந்துக் கொள்ள முயற்சிப்பது போன்ற பார்வை கொண்டு இருந்தது. அவன் ஒரு போர் வீரன் என்பதை உணர்த்தும் வகையில் அவன் புஜங்களில் போர்த் தழும்புகள், இத்தனையும் மீறி அவன் முகத்தில் ஒரு வித பதற்றமும், கவலையும் சேர்ந்து இருந்தது. இடையில் வாளுடன், புரவியை செலுத்திக் கொண்டிருந்த அவன் பாண்டிய நாட்டை சேர்ந்தவன் என்பதை உணர்த்தும் வகையில், அவன் ஆடையில், மீன் லச்சினை முத்திரை பதிக்கப்பட்டு இருந்தது, அவன் இப்போது கடற்கரை மணலில் புரவியை செலுத்தினான், புரவியின் குளம்பொலிகள் சத்தம் கேட்டு கடற்கரை ஓரத்தில் பூத்து குலுங்கி கொண்டு இருந்த தாழையின் வாசத்தில் இணை சேர முயன்ற கருநாகங்கள் சட்டென்று தாழை புதர் உள்ளே சென்று மறைந்தன.
அந்த கடற்கரையில் இருந்து பாண்டிய மன்னனின் ஆட்சி ஆரம்பிக்கிறது என்பதை உணர்த்தும் வகையில், ஆங்காங்கே மீன் சின்னம் பொறித்த பாண்டிய நாட்டின் கொடிகள் காற்றில் பறந்து கொண்டு இருந்தன, ஆங்காங்கே காவல் காத்துக் கொண்டு இருந்த பாண்டிய நாட்டு வீரர்கள் புரவியில் வந்தவனை பார்த்து சினேகத்துடன் சிரித்தனர்.
அதில் ஒரு வீரனை பார்த்து,



"வீரனே...காவல் காக்கும் பணிகள் சிறப்பாக நடக்கின்றதல்லவா?",


"சிறப்பாக நடக்கின்றது தளபதியார் அவர்களே", என்றான் அந்த வீரன்.


"நன்று, நான் அரண்மனை செல்கிறேன்", என்று புரவியில் இருந்து இறங்காமலே அரண்மனை நோக்கி சென்றான், அந்த படைத் தளபதி.


மூன்று புறமும் கடல் அலை சூழ, பளிங்கை இழைத்துக் கட்ட பட்டுள்ள அந்த பிரமாண்ட அரண்மனையில் அவன் உள்ளே நுழைந்தான்.குதிரையை அங்கு இருந்த பணியாளரிடம் குடுத்து விட்டு, அரண்மனை உள்ளே விரைந்தான்.
அந்த அரண்மனையில் அந்த நள்ளிரவு பொழுதில், மேலே உள்ள அந்த முதல் அறையில் பாண்டிய மன்னன் தலைமையில் மந்திரலாசனை நடந்துக் கொண்டு இருந்தது. அங்கு அமைச்சர் நந்தி ராஜ தேவர் மற்றும் ராஜ குரு, நரசிம்மச்சாரி, முதன்மை படை தளபதி, சிங்கள ராயர் ஆகியோர் தீவிர ஆலோசனையில் இருந்தனர்,
அப்போது,
"மன்னாதி மன்னர், பாண்டிய பேரரசர் வாழ்க, தங்களை காண, இரண்டாம் நிலை படைத் தளபதி ஆதவன் செய்தியுடன் வந்து உள்ளார்", என்று வாயிற்காப்போன் வந்து நின்றான்.


"வரச் சொல்", என்று மன்னன் உத்தரவு இட்டதும், சிறிது நேரத்தில் ஆதவன் வந்து அங்கு இருந்த அனைவருக்கும் வணக்கங்களை தெரிவித்தான்.ஆதவனை கண்டதும் அங்கு உள்ள அனைவர் முகத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.


"ஆதவா...போன காரியம் என்னவாயிற்று..உன் வதனத்தை காணும் போதே தெரிகிறது, நீ நல்ல செய்தி கொண்டு வரவில்லை என்று", என்றான் மன்னன்.


"மன்னிக்க வேண்டும் அரசே...தாங்கள் கூற்று மெய் தான், என்னிடம் ஒரு அசுப செய்தி உள்ளது", "முனிவர் கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்கள் தங்களிடம் இந்த ஓலையை கொடுக்க சொன்னார்" என்று பவ்யமாக நீட்டினான்.அதை வாங்கி படித்தான் பாண்டிய மன்னன்.


"வற்றாது ஓடும் வைகை நதி உள்ள தமிழகம் முதல்.. மேரு மலையில் இருந்து உதிக்கும், குமரியாறு பஃறுளியாறு ஓடும் லெமூரியா எனும் குமரி கண்டம் வரை, முதற் சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்து, என் அப்பன் குமரனின் மனதை குளிர்விக்கும் கோவே...நின் வாழி! நின் குலம் வாழி, நீதி வழுவாது இறை ஆட்சி செய்யும் பாண்டிய மன்னருக்கு இந்த கந்தன் அடிமை கச்சியப்ப சிவாச்சாரியாரின் வந்தனங்கள்!!!
மன்னாதி மன்னா....சென்ற ஏகாதசி இரவு அன்று தாங்கள் கண்ட சொப்பனத்தின் பலன் நான் அறிந்த வானியல் சாஸ்திர மற்றும் ஜோதிட கலை மூலம் கண்டேன், அதன் படி, தொடர்ச்சியாக நான்கு கடற் கோள்கள் ஏற்பட்டு, தாங்கள் ஆட்சி செய்யும் குமரி கண்டமானது அந்த கிருஷ்ண பராத்மாவின் துவாரகை பேரரசு ஆழியில் மூழ்கியது போல் மூழ்க சாத்திய கூறுகள் உள்ளதாக தெரிகிறது, வரப்போகின்ற இந்திர விழாவிற்குள் தங்கள் ராஜிய மக்களை அப்புற படுத்த, மற்ற பாதுகாப்பு வழி முறைகளை நடைமுறை படுத்தினால் நன்று மன்னா...", என்னப்பன் கந்தன், தங்கள் ராஜ்ஜியத்தில் குடிக் கொண்டு உள்ள அந்த குமரி அம்மன் அருளால் எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறேன் அரசே.."
என்று அந்த ஓலை முடிக்க பட்டு இருந்தது.
அதை கண்ட அரசனின் முகத்தில் இருள் சூழ்ந்தது, தொடர்ந்து அந்த ஓலையை பார்த்த அமைச்சர், ராஜகுரு, தளபதி ஆகியோர் முகங்களும் அமாவாசை இருட்டை பூசிக் கொண்டது.
"இந்த ஓலை குறித்து தங்களின் கருத்து என்ன அமைச்சரே...?", என்றான் பாண்டிய மன்னன்.
"மன்னா..கச்சியப்ப சிவாச்சாரியார் அந்த குன்றின் மேல் குடிக் கொண்டு உள்ள குமரன் அருளை பரிப் பூரணமாக பெற்றவர், அவர் இயற்றிய கந்த புராணம் இன்றும் நமது ராஜ்ஜியத்தில் உள்ள குமரன் கொலு வீற்றிருக்கும் ஆலயங்களில் பாடப் படுகிறது, அவரது வாக்கு, அந்த கந்தன் கூறுவது போல மன்னா...எனவே நாம் அனைவரும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகளை துரிதமாக செய்யலாம், அது மட்டும் இன்றி, தங்களுக்கு அந்த தீய சொப்பனம் வந்த அன்று, நான் நம் அரண்மனை ஜோதிடனை தங்கள் ஜாதகத்தை பார்க்க சொன்னேன், அதில், நாம் மீண்டும் நம் மதுரை இராஜியத்தில் ராஜ பரிபாலனம் செய்வது தான் நல்லது என்றும், இந்த குமரி கண்டம் தமக்கு நிரந்தரமானது இல்லை, இது விரைவில் அழிய போகிறது என்றும் கூறினார், மன்னா..,"இந்திர விழாவிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன மன்னா", என்று குரல் மெலிந்தது அமைச்சர் நந்தி ராஜ தேவருக்கு .
"எனக்கும் அமைச்சர் சொல்வது சரி என்றே தோன்றுகிறது மன்னா, நாம் அனைத்தையும் தயாராக வைப்போம் என்றார், இப்போதே நாம் துரிதமாக பணிகளை துவக்கினால், இந்திர விழாவிற்குள் கடற்கோளில் இருந்து தப்பி விடலாம் மன்னா...".என்றார் ராஜ குரு நரசிம்மச்சாரியார்.
உடனே பாண்டியன், " தளபதியாரே, நமது ராஜியத்தில் உள்ள அனைத்து முதல்நிலை முதல் கடைநிலை பணியாளர்கள் வரை அனைவருக்கும் முன்னெச்சரிக்கை மற்றும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு பயிற்சி எடுத்து தயாராக வைத்து இருங்கள், இந்த குமரியின் ராஜ்ய பரிபாலனத்தை தென் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்ய ஏற்பாடுகள் செய்யுங்கள்", "மதுரையில் இங்கு உள்ள லெமூரியா யர்களை தங்க வைக்க ஏற்பாடுகள் துரிதமாக செய்யுங்கள், நமது தங்க சுரங்கத்தில் வேலை செய்து வரும் சீன அடிமைகளை நன்றாக வேலை வாங்கி, இன்னும் நான்கு நாட்களுக்குள் கஜானா தங்க கட்டிக்களால் நிரம்ப வேண்டும்",
"நாளை அபாய முரசை இந்த குமரிக் கண்டத்தின் நமது அரசாட்சிக்கு உட்பட்ட 49 பிரதேசங்கள் முழுவதும் நாளை முழங்க செய்யுங்கள்",
கம்பீரமாக ஆணையிட்டு, கவலை சூழ்ந்த முகத்துடன், "சபை களையட்டும்", என்று கூறி அந்தப் புரம் நோக்கி நடந்தான் மன்னன். மன்னன் தலை மறையும் வரை காத்திருந்து, மன்னன் சென்று உடன், ஒரு பெருமூச்சு விட்டபடி அமைச்சரிடம் உத்தரவு பெற்று அரண்மனையை விட்டு வெளியே வந்தான் ஆதவன்.


நிலவு உச்சி வானில் இருந்தது, தூரத்தில் எதோ இரு கடற் கூழைகள் அலறும் சத்தம் கேட்டது, அது பின்னிரவு பொழுது என்று தெரிந்து கொண்டான், தன் இல்லத்திற்கு சென்று உறங்க மனமில்லாத வனாய், மனதில் கவலை சூழ்ந்த வனாய்
குதிரையை பாண்டிய எல்லை ஆரம்பிக்கும் கடற்கரை நோக்கி செலுத்தினான் ஆதவன்.
கடற்கரையில்...
"வாருங்கள் தளபதியார் அவர்களே...என்று அவனை வரவேற்றான் சாகுந்தலன், அவனின் தோழன், அவனுக்கு அடுத்த படியான நிலையில் பாண்டிய படையில் உள்ளவன்.
"இந்த குமரிக்கும், நம் மதுரைக்கும் தான் நான் தளபதி, உனக்கு என்றுமே நான் ஆதவன் தான் என் அருமை தோழனே...", என்று அவன் சிரித்தான்.
உடனே சாகுந்தலன், "ஆஹா... பலே பலே...இந்த குமரிக்கு மட்டும் தான் தாங்கள் தளபதியா?, தாங்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது, இன்னொரு குமரிக்கும் தாங்கள் தளபதி தான்", மறந்து விட்டீர்கள் போலும்..!!!"
என்று கூறிக் கொண்டு சாகுந்தலன் நகைத்தான்.
"நல்ல வேளை நான் பிழைத்தேன்..அவள் செவிகளில் மட்டும் தங்களுடைய சொற்கள் விழுந்து இருந்தால், என் உடைவாளுக்கு என்னையே இரையாக்கி இருப்பாள்", என்று சாகுந்தலன்னிடம் சொல்லி விட்டு சிரிக்காமல் சிந்தனையில் ஆழ்ந்தான் ஆதவன்.
அவனின் மகிழ்வு நிறைந்த சிரிப்பை எதிர்ப்பார்த்து அவன் முகம் பார்த்த
சாகுந்தலனுக்கு முகம் யோசனையில் ஆழ்ந்தது.


"என்ன நண்பா...உன்னுடைய வதனத்தில் மகிழ்வு இல்லை, என்னிடம் அலாவி நகைத்தாலும் உன் அகமும் புறமும் எதோ ஒரு தீவிர சிந்தனையில் ஆழ்ந்து இருக்கிறது" உடலும் மனமும் நன்றாக தானே உள்ளது?",


"நீ சொல்லுவது உண்மை தான் நண்பா....இங்கு நான் மட்டும் அல்ல...இந்த குமரிக் கண்டமும், இங்கு வசிப்பதால் நமது குமரி மக்களுக்கும் விரைவில் ஆபத்து வர போகிறது நண்பா...", இதை இப்போது என்னால் உன்னிடம் சொல்ல இயலாது நண்பா...முறைப்படி, அரச அறிவிப்பு நாளை காலை வெளியாகும், அப்போது நீ அறிந்துக் கொள்வாய்", என்றான் கவலை சூழ்ந்த முகத்துடன் ஆதவன்.


கடற்கரையை வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்கும் ஆதவனை அவன் மனம் அறிந்து தனியாக விட்டு அகன்றான் சாகுந்தலன்.


"மேருமலையில் இருந்து உற்பத்தியாகி இரு கடல்கள் போல குமரி நாட்டில் பாயும் குமரியாறு மற்றும் பஃறுளியாறும், குடிலை, சிவை, உமை, தரணி, குமரி, சிங்கை மற்றும் சுமனை போன்ற ஏழு ஆறுகளும் பாய்ந்து வளம் கொழிக்கும், குமரிக்கொடு,மணிமலைகளும் கொண்டு பிரமாண்டமாக விரிந்து கிடக்கும் குமரியின் நிலப்பரப்பும்", "பொன்னும் பொருளும் மணியும் முத்தும், பவளமும், மிளகும், தந்தமும் ஏற்றுமதி, இறக்குமதி எல்லா கணங்களும் நடந்துக் கொண்டு இருக்கும், யவனர்கள், கப்பல் வியாபாரிகள், வெளிநாட்டினர் வருகையால் மிளிரும் குமரி நாட்டின் பிரமாண்ட துறைமுகமும், குமரி மக்களுக்கு அருளையும் மன அமைதியையும் வழங்கி தன் பால இதழ்கள் புன்னகை சிந்த குமரியாற்றின் அருகே குமரவேல் பாண்டியனாக கொலு வீற்றியிருக்கும் திருநீறு மணம் கமழும் கந்தன் ஆலயமும், கடற்கரை ஓரம் கன்னியாக அருள் பாலிக்கும் கன்யா குமரி அம்மன் ஆலயமும்", "வானியல் சாஸ்திரங்களிலும், சிற்ப கலைகளிலும் சிறந்து விளங்கும் குமரி நாட்டு மக்களும், தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என்று தமிழை வளர்க்கும் சங்கங்களும், அதில் பாதுகாத்து வைக்க பட்டுள்ள எண்ணற்ற முனிவர்கள் எழுதிய நூல்களும் கடலுக்கு இரையாக போகிறதா...!!!" "இயற்கையே...உனக்கு எதனால் இத்துணை பேராசை? " என்று தன் முன்னே பறந்து விரிந்த கடலை கேட்டான் ஆதவன், அவன் மனம் வலித்தது.


அப்போது.....
அவன் அருகில் உள்ள தாழை புதரில் ஏதோ சத்தம் கேட்டது, இடையில் இருந்த வாளை உருவி புதர் அருகே சென்றான் ஆதவன், சட்டென்று அவன் இடுப்பில் இருந்த கட்டாரியை உருவி ஒரு வளைக் கரம் அவன் நெஞ்சில் குறி வைத்த படி அவனை தாழை புதரில் சாய்த்தது அந்த உருவம், அவன் சாய்ந்ததால் தாழைப்பூவில் படுத்து கொண்டு இருந்த கருநாகம் ஒன்று தன் படத்தை விரித்துக் கொண்டு மேலே எழ, அதனை அந்த வளைக்கரம் அப்படியே பிடித்து, தூரமாக வீசி எறிந்தது.


"குமரியின் தளபதியாருக்கு போர் பயிற்சி போதவில்லை போலும்....எதிரி இப்படி பின்புறம் இருந்தும் கட்டாரியை எடுத்து தங்களை குறி வைக்கலாம் அல்லவா...?",
என்று நகைத்தது அந்த பெண் குரல்.அவன் முகம் அருகே ஒரு நிலவு முகம் தெரிந்தது.


"என்னுடைய தேவியை தவிர எவருக்கு இப்புவியில் என் நெஞ்சில் கை வைக்க தைரியம் உள்ளது?", தேவியின் வளைக்கரம் கட்டாரியை நோக்கி நீண்டதை யாம் முன்னரே அறிந்தோம்",


"ஆஹா...இக்குமரியில் பல்லாயிரம் பெண்கள் இருக்க தாங்கள் அது என்னுடைய வளைக்கரம் தான் என்று எவ்வாறு அறிந்தீர், தளபதியாரே...


"தங்களை தீண்டும் காற்றை கூட யாம் அறிவோம் தேவியாரே...உடல் மட்டும் எம்மிடம் இருக்க, என் உயிர் தங்களிடம் வந்து தான் வெகு காலம் ஆகி விட்டதே...தேவி",


"அப்பப்பா.."நம்பி விட்டேன் தங்களின் கூற்றை மெய் என்று, தளபதியாரே...போதும் தங்கள் வார்த்தை ஜாலமும் நடிப்பும்....குமரியின் தளபதிக்கு இந்த நடிப்பு அழகல்ல.."


"எதற்கு என் மீது தமக்கு இத்துணை மனக் குறை தேவி",


" தாங்கள் என்னை விட்டு நீங்கி இத்துடன் ஒரு வருடங்கள் ஆகி விட்டன, தங்கள் கூற்று படி உங்கள் மனதை என்னிடத்தில் தந்து விட்டு நீங்கள் போர் புரிய கடாரம் சென்று விட்டீர்",,"இரு திங்கள் கழிந்து வந்து விடுவேன் என்று எம்மிடம் கூறி விட்டு சென்றவர் , இப்போது தான் வந்து இருக்கிறீர்கள், ஆனால் குமரி வந்தும் என்னை சந்திக்க வரவில்லை...",


"தங்கள் வதனம் காணாமல், தினமும் தங்கள் வருகையை எதிர் பார்த்து, இந்த குமாரி தேவி பட்ட பிரிவால் பட்ட துன்பங்களை இந்த பரந்த குமரியின் கடலும், அந்த ஆலயத்தில் குடிக் கொண்டு உள்ள குமரி அம்மனும் அறிவார்கள்",


"எத்தனை நாட்கள்...தங்களின் முகம் பார்க்க ஏங்கினேன், நீங்கள் அறிவீர்களா.....கனவில் தோன்றி மறையும் தங்கள் முகம் கண்டு என் மஞ்சம் கண்ணீரால் நனைந்து கதை உங்களுக்கு தெரியுமா தளபதியாரே..?" சொப்பனத்தில் கூட வருகிறேன் என்று கூறிவிட்டு கண் விழித்தால் காணாமல் போய் விடுவீர்...இப்போது தாங்களும் தங்கள் உயிரும் என் வசம், இப்போது எங்கே சென்று மறைவீர்?",என்று அவன் மார்பில் என்று ஆதவன் நெஞ்சில் குறி வைத்து அழுத்தினாள் குமாரி தேவி.


"இனியவளே...இந்த ஆதவன் உடலும் மனமும் உயிரும் தமக்கே சொந்தம், எடுத்துக் கொள், தம்மை விட்டு யாம் எத்தனை தூரமாக இருந்தாலும், என் மனம் உன்னையே எண்ணிக் கொண்டு இருக்கும் தேவி"


"போதும்...நிறுத்துங்கள், தங்கள் இப்புவியில் இல்லாத மறுகணமே, நான் நீங்கள் எங்கு சென்றீர்களோ அங்கு தங்களை பின்பற்றி வந்து விடுவேன்...இந்த ஒரு வருடமும் தங்கள் நினைவுகள் மட்டும் தான் என்னை இக்குமரியில் உயிருடன் வாழ வைத்தது என்னவரே...இதற்கு மேல் என்னை விட்டு இத்துணை நாட்கள் நீங்கள் பிரிந்தால், நீங்கள் பிரிந்த மறுகணமே நான் வானுலகம் சென்று விடுவேன் மன்னவா....",
என்று குறி வைத்த கட்டாரியை முன்பு இருந்தது போலவே அவன் இடையில் வைத்து விட்டு, அவன் மார்பில் சாய்ந்து தேம்பினாள் அந்த குமாரி தேவி.அவளை இறுக அணைத்து கொண்டு அவள் தோகை கூந்தலில் முகம் புதைத்தான் ஆதவன், அவளின் காதலும், அது கொண்ட பிடிவாதமும் அவனை சிலிர்ப்பில் ஆழ்த்தியது.
கண்களில் குறும்பு பொங்க


" என் தேவியின் தேன் மொழிகளை கேட்க வந்தேன், ஆனால் என்னவளின் தேம்பல் மொழி கூட யாழை மீட்டுவது போல இனிமையாக கேட்கிறதே...."என்று கூறி நகைத்தான்.


"எங்கே உனது உன் வாயாடி தோழி?, வார்த்தை விளையாட்டால் வாயை மூட வைக்கும் விக்கிரமாதித்ய ககிள்ளை அல்லவா"


"பவளா ஒன்றும் வாயாடி இல்லை, ஒன்று தெரியுமா...என் வதனம் வாடி இருக்கும் போதெல்லாம் என் பவளா தங்கள் நாமத்தை சொல்லி சொல்லி என்னை மாற்றி விடுவாள், மிகவும் நல்ல தோழி அவள்","போதும் தங்கள் குறும்பு", என்று அவன் மார்பில் குத்தினாள்.அவளால் விளிக்க படும் பவளா ஆதவனால் அவளுக்கு சிறிய பறவை குஞ்சாக தரப்பட்ட அழகான பச்சைக் கிளி, தற்போது பேசும் வளர்ந்த கிளி.


"அன்பே...இந்த பரந்த மார்பும், அதில் இடமும் எல்லா ஜென்மங்களிலும் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும்", தங்கள் மார்பில் சாய்ந்து இருக்கும் இந்த தருணம் போதும் என் வாழ்வு பேறு பெற...", .அவன் அருகில் இருந்த தாழம் பூவை ஒடித்து அவள் பரந்த கூந்தலில் சூட்டி அவள் முகத்தை தன் கையால் நிமிர்த்தி பார்த்தான், அவன் பார்வை வீச்சு தாங்காது நாணத்தில் அவள் தலைக் குனிந்து அவன் மார்பில் சாய்ந்தாள்.
அவள் மார்பில் சாய்ந்து சிந்தனையில் இருப்பது கண்டு,


"என்னடி யோசனை, உன்னவன் அருகில் உள்ள போது?", என்றான் ஆதவன்.


" அன்பே...தங்களால் சூட்ட பட்ட இந்த தாழை இன்றில் இருந்து என் வைர மாலை பெட்டியில் பத்திரமாக இருக்கும்", அதை பற்றிய சிந்தனையில் இருந்தேன்",
என்றாள் கடல் வாணிபம் செய்யும் குமரியின் தலை சிறந்த வியாபாரியின் மகளான குமாரி தேவி.


"ஆனால் தேவி, இந்த தாழை மடல் காய்ந்து சருகாகி விடும்",


"அதனால் என்ன தளபதியாரே...இது தங்கள் கரங்களால் சூட்டிய மலர் அல்லவா...?", இதற்கு எத்தனை கோடி வைரங்களும், மாணிக்கங்களும் வைத்தாலும் இணையாகுமா?",ஆதவன் பதில் பேசாது அவளை அணைத்துக் கொண்டு அவள் செவ்விதழ்கள் நோக்கி குனிந்தான்.
தூரத்தில் எங்கோ குயில் கூவும் ஒலி கேட்டு தன் உணர்வு வர பெற்றவர்களாக இருவரும் நிமிர்ந்தனர்.
மெல்ல மெல்ல அதிகாலை இருள் ஆரம்பித்து இருந்தது.
"தேவி, பொழுது புலர போகிறது போல, நீ உன் இல்லம் செல், நாம் அனைவரும் மதுரை சென்ற பின், என் தந்தையுடன் உன்னை விவாகம் செய்ய பெண் கேட்டு வந்து உன்னை மணப்பேன்....இது மிகவும் விசேஷமானது, கடாரத்திற்கு சென்ற போது அங்கு உள்ள ஒரு புத்த குகையில் ஒரு சாதுவால் எனக்கு தரப்பட்டது தேவி, இரவில் மட்டுமே மின்னும் அபூர்வ கல்லில் செதுக்கப்பட்ட நீலக்கல் மோதிரம், இதுவே நான் உனக்கு தரும் நம் திருமணத்தை திற்கான உறுதி மொழி, நம்மை யாராலும் பிரிக்க முடியாது காதலே..."
என்று அவன் அணிவித்து விட, அவள் கண்களில் நீர் வழிய, பேச வார்த்தை இன்றி புறப்பட்டவள்,யோசனையாக, "மதுரையா....எதற்கு அங்கே செல்கிறோம் தளபதியாரே",


"நகரம் சென்ற பின் அதை நீ அறிவாய் ஆரமுதே....இப்போது செல்",என்று கனிவாக சொன்னவன் முகம் ஓலை செய்தி குறித்து மனம் கவலையில் ஆழ்ந்தது.
அவன் அவ்வாறு சொல்லியதற்கு குமரி எல்லையில் கால் வைத்த பிறகு அவளுக்கு தெரிந்தது. குமரி முழுவதும் அதே பேச்சு.குமாரி தேவி மனம் கவலையில் ஆழ்ந்தது, மாளிகையின் மாடம் வழியே வெளியே பார்த்தாள்.தூரத்தில் நீல வண்ணத்தை தூரிகையாக கொண்டு தீட்டியது போல சமுத்திரம் பிரமாண்ட மாக பரந்து விரிந்து இருந்தது. அதன் அருகில் உள்ள துறைமுகத்தில் மீன் சின்னம் பொறித்த பாண்டிய கொடி பறந்து கொண்டு இருந்தது. என்றோ ஒரு காலத்தில் இந்த குமரி நாடு, இந்திரலோகத்தில் உள்ள சிற்பி மயனால் உருவாக்க பட்டது என்கிறார்கள், அது உண்மை தான் என்பது போல, அங்கு அந்த மாட மாளிகைகளும், கோபுரங்களும், இல்லங்களும் கண் கவரும் வகையில் இருந்தன, தூரத்தில் தெரிந்த குமரிக்கொடு,மணிமலை தொடர்களும் விரைவில் அழிய போகிறதா!!!!!!! அய்யகோ, இது என்ன துயரம்....இத்தகைய அழகான நாடு விரைவில் ஆழியின் அடியில் உறக்கம் கொள்ள போகிறதா!!!, என்று எண்ணி அவள் மனம் துயரத்தில் மூழ்கியது.
அவள் முகம் கவலையில் இருப்பது கண்டு, அவள் தோளில் அமர்ந்த பவளா, அவள் செவி அருகே சென்று, தன் சிவந்த அலகால், "ஆதவன்! ஆதவன்...!",என்று கூறியது, அதை கண்டு குமாரி தேவி முகத்தில் புன்முறுவல் தோன்றியது, அருகில் இருந்த கனிகளை உண்ண கொடுத்தாள் பவளாவிற்கு.
தூரத்தில் கந்தனின் ஆலய மணியின் ஓசை கேட்டு அவள் மனம் சிறிது நேரம் அமைதி அடைந்தது, ஆதவனை உடனே பார்க்க வேண்டும் என்று அவள் மனது தவித்தது. தன் தோழிகளுடன் குமரன் ஆலயம் நோக்கி நடந்தாள் குமாரி தேவி.
அங்கு ஐந்து தமிழ் புலவர்கள் தங்கள் இயற்றிய அகிலத்திரட்டு அம்மானை என்னும் நூலையும் பாமாலையாக குமரனுக்கு சமர்பித்து கொண்டு இருந்தனர்.
"ஆறுமுகமாய் ஆயனளவிடவே
கூறிடவேசத்திதனைக்..... கொண்டார்வேலாயுதமாய்
நல்லசிவனாரை நந்தீசுரராக்கி
வல்லபிலமுள்ள...... வாய்த்திக்கெட்டிலுள்ள
பாலரைவீரர்களாய்ப்..... பண்ணினாரெம்பெருமாள்
வாலமுள்ளசன்னாசி...... மாரைப்பெருப்படையாய்
கந்தனெனநாமங்..... கனத்தசடையாண்டியுமாய்
கொந்துகொந்தாய் பீற்றைக்கூறைமிகவணிந்து
வேலுமிகப்பிடித்து....... வெண்ணீறுமேதரித்து
நாலுரண்டுசிரசில்.... நல்லருத்திராச்சமிட்டு
பத்துரண்டுகாதில்...... பைம்பொன்னாச்செம்பணிந்து
முத்திரிகளிட்டுக்கந்தப் பொக்கணங்கள்தோழிலிட்டு
சன்னாசிபோலே.."

என்று புலவர் ஒருவர் கந்தனின் தோற்றத்தை மெய் சிலிர்த்து பாடிக் கொண்டிருந்தார்.
அதைக் கேட்டு மெய் மறந்து நின்றாள் குமாரி தேவி, உள்ளே வள்ளி தெய்வானையுடன் முருகன் குழந்தையாக சிரித்துக் கொண்டு இருந்தான்.
வணங்கிய பின் பிரகாரத்தை சுற்றி வந்தவள், ஆலயத்தின் பின்னே உள்ள தாமரை குளம் அருகே சோகமாக அமர்ந்து இருந்தாள்.
"என் தேவி முகம் எதனால் சிரிப்பை தொலைத்து இருக்கிறது?"
என்று ஆதவன் குரல் கேட்டு ஆனந்தத்துடன் நிமிர்ந்தாள்.
"வந்து விட்டீர்களா....!!!! தாங்கள் எவ்வாறு இங்கே வந்தீர்கள்...? என்றாள் ஆனந்தத்துடன்.
"தேவி, கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்கள் கன்யா குமரி தேவி ஆலயத்திற்கு வருகை தர உள்ளார், அவரின் பாதுகாவல் புரிய இங்கு வந்தேன்",சொல் தேவி, தாமரை மலர் போல் புன்னகை சிந்தும் தங்கள் முகம், எதனால் சிரிப்பை தொலைத்து இருக்கிறது?"
"நம் நாட்டின் நிலையை பார்த்தீர்களா...? எனக்கு கலக்கமா க இருக்கிறது தளபதியாரே...எனக்கு மதுரை வர விருப்பம் இல்லை, இதுவே என் நாடு நான் வர மாட்டேன்....நாம் இருவரும் முதல் முதலில் சந்தித்தது இங்கு தான், நாம் மணம் செய்து இந்நாட்டிலே வாழலாம், அந்த குமரனின் மழலை முகத்தை பார்த்தீர்களா....எத்துணை அழகு....அதே போல் நமக்கு ஒரு புத்திரன் பிறக்க வேண்டும், அவனுக்கு குமரன் என்று நாமம் சூட்டி மகிழ வேண்டும்....",
என்று கண்களில் காதல் வழிய பேசிக் கொண்டே போனவளை ரசித்தான் ஆதவன்.
"தேவி....உன் மனம் யாம் அறிவோம்....எல்லாம் சுபமாக நடக்கும், குமரியில் உள்ள அனைவரும் நாட்டை விட்டு மதுரைக்கு செல்ல வேண்டும் என்று அரசன் உத்தரவு, இங்கு தங்களால் மட்டும் அல்ல, யாராலும் இருக்க முடியாது", இன்னும் சில தினங்களில்"
"என்னால் இதை ஏற்றும் கொள்ள முடியவில்லை என்னவரே...நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்கே தான், தாங்கள் அவ்வாறு இல்லை, மதுரையில் பிறந்து, இங்கு பாண்டிய மன்னன் ராஜ்யம் ஆரம்பித்த போது தான் வந்தீர்கள்...ஆனால் நான் அவ்வாறு இல்லை, நான் இந்த குமரி கடலிலே நீராடி முத்து எடுத்தவள், நான் இந்த குமரியின் நாயகி", "அதோ அங்கு கொலு வீற்றிருக்கும் அந்த கன்யா குமரி தாய், என்னை ஈன்று எடுத்த தாய் போல....இவை எல்லாம் விட்டு வர எனக்கு மனமில்லை,இதை தடுக்க வேற வழிகள் இல்லையா?"
என்று நீர் கண்களில் வழிய, அவனை நோக்கி கேட்டாள், அவள் வண்டு போன்ற கரு விழிகளில் கவலை சூழ்ந்து இருப்பது கண்டு ஆதவன் அவளை அணைத்துக் கொண்டான்.
"என் பிரியத்துக்கு உரியவளே....,என் மொழிகளை கேளாய்!, இன்னும் சில தினங்களில் இந்த குமரி நாடு நம் மன்னனுக்கும் சரி, உனக்கும் சரி, எனக்கும் சரி, யாருக்கும் சொந்தம் இல்லை, சமுத்திரராஜனுக்கு தான் சொந்தம் ஆக போகிறது", "அரண்மனையில் கடல் அன்னைக்கும் வருண பகவானுக்கும் பூஜைகளும் புனஸ்காரங்களும், வேள்விகளும் மன்னன் தலைமையில் நடந்துக் கொண்டு இருக்கிறது, ஜோதிட வல்லுநர்கள் முதல் மகரிஷிகள் வரை அனைவரும் இதை தடுக்க முடியாது என்று தான் கூறுகிறார்கள், இந்த கடற் கோள் வந்த பிறகு, ஏதேனும் பகுதி எஞ்சி இருந்தால், நமது மன்னர், காஞ்சிப் புரத்திலும், கடாரத்திலும் உள்ள சிறந்த வல்லுனர்களை கொண்டு, இயற்கை சீற்றத்தால் எளிதில் அழிக்க முடியாத புதிய நகரை உருவாக்க தீர்மானித்து உள்ளார்","நாம் மதுரை சென்று மணம் புரிந்து நாம், குமரன் என்று மூவருமாக இக்குமரி நாட்டின் மண்ணை மிதிப்போம்",
என்றதும் அவள் முகம் செவ்வானம் போல் சிவந்து போனது, நாணம் மிகுதி கொண்டு தன் முகம் மூடினாள்.
" என்னை ஈர்க்கும் இந்த நிலவு முகத்தில் கவலை வேண்டாம்" என்று புன்னகைத்த படி,என்று தன் கையில் இருந்த தாமரை மொட்டால் அவள் முகத்தை தட்டினான், அவள் கண்களை மெல்ல திறந்தாள்.
"போதும் தங்கள் குறும்பு! வாருங்கள் நாம் இருவரும் என்னுடைய தாய் அந்த கன்யா குமரி தேவியை வணங்கி விட்டு வருவோம்...",என்று தன் தோழிகளை காத்து இருக்கும் படி சொல்லிவிட்டு, தேவியின் ஆலயம் நோக்கி நடந்தாள்
"வருகிறேன், நீ முதலில் செல்", என்றான் ஆதவன்.
அங்கு, தீப சுடரில் மின்னினாள் அம்பிகை, "தாயே...இந்நாட்டை காப்பாற்றுவாயாக..!, திக்கு தெரியா நிலையில் உள்ளோம்....மன்னன் சரபோஜி கண் முன்னே, நிலவை தோற்றுவித்து, அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய உனக்கு, இந்த கடற்ககோள் கள் எம்மாத்திரம்....எங்களை காப்பாயாக! தாயே...ஏழு ஜென்மங்களிலும் என் கணவனாக ஆதவனையே நான் அடைய வேண்டும்," என்று வணங்கி அவள் கண்களை திறந்தாள்.
ஆலயத்தின் வாயிலில் ஏதோ பரபரப்பு, கச்சியப்ப சிவாச்சாரியார் தன் சீடர்கள் புடை சூழ வந்து கொண்டு இருந்தார், அருகில் உடை வாளுடன் ஆதவன் வந்து கொண்டு இருந்தான்.
தன் எதிரே வந்து கொண்டு இருந்த குமாரி தேவியை அழைத்தார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
"உன் மீது அம்பிகைக்கு பூரண கருணை, யாருக்கும் இது போல் பேறு கிட்டாது மகளே...இப்பிறவி முழுவதும் நீ அம்பிகை அருகிலே இருப்பாய், பிறகு நீ விருப்ப பட்டது போல, உன்ன வன், உன் அனைத்து பிறவி களிலும் உனக்கே கணவனாய் வாய்ப்பான்",
என்று அவர் ஆசிக் கூறியதும் ஆனந்த கண்ணீர் அவள் கண்களில் கொட்டியது.
அடுத்த நாள் காலை தோட்டத்தில் உலாவிக் கொண்டு இருந்தாள் குமாரி தேவி, அப்போது, அவளின் பவளா ஓலையுடன் பறந்து வந்து அவள் தோளில் அமர்ந்து "ஆதவன்! ஆதவன்!", என்று கூறியது.ஆச்சிரியத்துடன் அந்த ஓலையை பிரித்தாள்.
"என் ஆரமுதுக்கு குமரி தளபதியாரின் வந்தனங்கள்....!!!, மன்னரின் உத்தரவுக்கு ஏற்று மதுரை செல்கிறேன், நான் அங்கு விரைந்து சென்று, அங்கு குமரி மக்கள் வரும் ஏற்பாடுகளை கவனிக்க வேண்டுமாம்..அந்த பொறுப்பில் என்னை தலைமை தாங்கி பணிகளை விரைவாக முடிக்க சொன்னார், அதனால் நாம் செல்கிறேன் துரிதமாக, தேவி, நீ மட்டும் அல்ல, நம் குமரி நாட்டு மக்கள் அனைவரும் இன்று இரவே புறப்பட்டு மதுரை செல்ல வேண்டும், விரைவில் உன்னையும் நான் பவளாவையும் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சந்திப்பேன்...
- என்றும் தங்களுடைய
ஆதவன்

அவளுடைய ஆதவன் முதன் முதலில் அவளுக்கு அனுப்பிய ஓலை என்று தன் ரத்தின மாலை பொட்டியின் அடியில் பத்திர படுத்தினாள், பிறகு அவன் அணிவித்த மோதிரத்தை தன் இதழில் ஒற்றி எடுத்தாள். "விரைவில் மதுரை சென்று என்னவனை காண வேண்டும்", என்று எண்ணிக் கொண்டு மாடம் வழியே வீதிகளில் தங்கள் பொருட்களுடன் மக்கள் குமரி நாட்டை விட்டு அனைவரும் வெளியேறி கொண்டு இருந்தனர்.
அவள் தோள் தொட்ட அவளின் தாய், சாந்தி தேவி, "மகளே....விரைவில் மதுரை நோக்கி கிளம்புவாயாக, உன் தந்தை வியாபாரம் நிமித்தம் குமரி துறைமுகம் சென்ற போது, அங்கு ஏராளமான பட்சிகள் சமுத்திரத்தை சுற்றி கூவிக் கொண்டு இருந்தனவாம், சமுத்திரத்தின் நீர் ஆனது உள்ளே சென்றது போல் தோன்றியதாம்! இது விரைவில் இந்த நாடு ஆழி அடியில் செல்வதற்கான அறிகுறி, அதற்குள் நாம் மதுரை செல்ல வேண்டும், விரைவில் கிளம்புவாயாக.....!
என்று கவலை சூழ்ந்த முகத்துடன் கூறிவிட்டு அகன்றாள்.
அதைக் கேட்டு கவலை கொண்ட குமாரி தேவி, தன் பொருட்களை எடுத்து வைத்தாள், இதன் பிறகு தன் வாழ்வு முழுவதும் மதுரையில் தான், எனவே, அந்த கன்யா குமரி தாயை ஒருமுறை தரிசித்து விட்டு வருவோம்!", என்று எண்ணிக் கொண்டு தேவியின் ஆலயம் நோக்கி நடந்தாள்.
திரள் திரளாக குமரி மக்கள் அனைவரும் குமரி விட்டு நீங்கி கொண்டு இருந்தனர், நிலம் ஒரு முறை குலுங்கியதால் குமரி நாடே ஆட்டம் கண்டு குலுங்கியது, எப்போதும் ஒலிக்கும் மணி, பூஜை செய்யும் அர்ச்சகர், ஆலயத்தின் வாயிற் காப்போன் இன்றி
யாரும் இல்லாமல் கன்யா குமரி அம்மன் சிரித்துக் கொண்டு சிலையாக நின்றாள், அவளின் பாதம் பற்றிய குமாரி தேவி,
"தாயே....நான் இந்த குமரி விட்டு நீங்க போகிறேன்...என்னை என் ஆதவனுடன் சேர்த்து விடு", என்று வணங்கி கொண்டு இருந்த போது, ஆலயத்தின் வெளியே ஒரே கூச்சலும் குழப்பமும் பெரியதாக சூறைக் காற்று வீசும் சத்தமும், பறவைகள் அலறும் சத்தமும் கேட்டது, விரைந்து ஓடி,ஆலயத்தின் வெளியே சென்று பார்த்தாள்.
அங்கே சற்று தூரத்தில், மூன்று பனையின் உயரத்தில் கடலலைகள் சீற்றம் கொண்டு எழும்பி வந்து கொண்டு இருந்தது, கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை அந்த கடலைகள் தவிர வேறு கோட்டைகள், மாளிகைகள், மக்கள் என்று எதனையும் காணவில்லை, தன் சுழற்றி அடிக்கும் அலைக் கரங்கள் கொண்டு அனைத்தையும் விழிங்கி கொண்டே வந்தது. வான் அளவு உயரத்தில் எழும்பி வந்த அலைகளின் நீல மற்றும் வெண்மை நிறத்தில், எது வானம், எது சமுத்திர அலைகள் என்று அறிய இயலாமல் போனது, ஒரு முறை நிலம் ஆடிக் குலுங்கியது.
அதனைக் கண்டு அதிர்ந்து போய் நின்றாள் குமாரி தேவி, ஓடிச் சென்று கன்யா குமரி தேவியின் பாதம் பற்றினாள்,
"தாயே....இதோ வந்து விட்டது, சமுத்திர ராஜனின் கரங்கள், என்னவன் வதனத்தை காணாமல் நானும் என் காதலும் இந்த சமுத்திரத்தில் மூழ்க போகிறோம்! உன் அருகிலே உன்னை நினைத்தே என்னுயிர் விடுகிறேன்...இனி வரும் பிறவிகளில்யாவது எங்களை சேர்த்து விடு, என்று கண்களில் நீர் வழிய தேவி பாதம் பற்றி கதறினாள், அப்போது ஆலயத்தில் உள்ள மணி தானாக ஒலிக்க தொடங்கியது, காற்று வீச தொடங்கியது, விரலில் உள்ள ஆதவன் அணிவித்த மோதிரத்தை முத்தமிட்டு,
"நான் இனிவரும் பிறவிகளில் உங்களை பிரியேன்...தளபதியாரே, உங்களோடு சேராத இந்த வாழ்வு குமரியின் அலைகளுக்கு சொந்த மாக்க போகிறது, விரைவில் தங்களை சந்திப்பேன் வானுலகில்", என்று இயம்பிய படி
கன்யாகுமரி தேவி எதிரில்
கண்களை மூடி, பத்மாசனத்தில் அமர்ந்தாள், தூரத்தில் இருந்து பலத்த சத்தத்துடன் வந்த பேரலை அப்படியே ஆலயத்தை தன் விழுங்கியது.
ஆதவன் வந்து காணும் போது, குமரி நாட்டை காணவில்லை...எங்கும் இறந்து கடலைகளால் சிதைந்து போன பிணங்களையும், நீரால் சூழப்பட்டு, இரண்டாக உடைந்து சிதைந்து போன இல்லங்களு மம் அவனை வரவேற்றன....
"அய்யோ!!!!!!! என் குமரி நாடு எங்கே! பளிங்கு இழைக்க கட்ட பட்ட என் மாமன்னரின் அரண்மனை எங்கே! எம் குமரி மக்கள் எங்கே! அய்யா கோ....என்று தரையில் வீழ்ந்து கதறினான்.
அய்யோ....என்னுடைய தேவி! தேவி!...என்னவள் எங்கே! என்று குமாரி தேவி நினைவு வந்து மனம் கலங்கி அங்கும் இங்குமாக ஓடி அங்கு சிதைந்து கிடந்த பிணங்களை பார்த்தான், "என்னவளே! உன்னை மணப்பேன் என்று வாக்களித்தேனே! அய்யோ என்று கதறிய படி அவன் ஒவ்வொரு பிணங்களையும் பார்த்து அவளை தேடிக் கொண்டு வந்தான்,
அப்போது எங்கிருந்தோ வந்த பவளா கத்திக் கொண்டே அவன் தோளில் சிறகடித்து அமர்ந்தது, அதனை கண்ட ஆதவன்..."பவளா என்பவளை கண்டாயா? அவள் நிலை என்ன? என்று கதறினான். அவன் தோளில் இருந்து பறந்து கொண்டு சென்றது பவளா, அதன் பின்னாலே ஓடினான் ஆதவன்.
எங்கும் சமுத்திரத்தின் ஆழி சூழ்ந்து இருந்தது, அங்கு ஒரு கடலையால் தலைகீழாக புரட்டபட்டு, பிய்ந்து சாய்ந்து போன மரம் அருகே, பத்மாசனத்தில் அமர்ந்து நிலையில், விரல்களால் அவன் கொடுத்த நீலக் கல் மோதிரத்தை இறுக்கி பிடித்த படி சாய்ந்த நிலையில் தன் உயிரை விட்டு இருந்தாள் குமாரி தேவி.
நீரினால் முகம் சிறிது சிதைந்து போய் இருந்தது.
"என்னவளே......!!!!!!!!!!!!", என்று ஆதவன் கதறிய கதறலில் மீண்டும் அந்த சிதைந்த பகுதி குலுங்கியது. ஓடிச் சென்று அமர்ந்த நிலையில் உள்ள அவள் மடியில் வீழ்ந்தான்.
"என் அன்புக்குரியவளே... ஏ ன் என்னை விட்டு சென்றாய்? நீ இல்லாத இப்புவியில் எவ்வாறு நான் வாழ்வேன் தேவி? என்று கதறிக் கொண்டே தன் வாளை எடுத்து தன் கழுத்தை அறுத்து கொண்டு உயிரை வாணுலகில் உள்ள தன் தேவியிடம் சேர்ப்பித்து விட்டு வெறும் உடலாக சாய்ந்தான் ஆதவன்.
வெகுநேரம் அந்த பிரதேசம் முழுவதும் கேட்கும் படி கத்தி கொண்டு இருந்த பவளாவின் குரல் அடுத்தடுத்து எழுப்பிய சமுத்திர அலைகளால் காணாமல் போனது.











இன்று 2021....

டிங்...! டிங்..! டிங்....!
என்று அழைப்பு மணிக் கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே கதவை திறந்தாள் குமரி.
அவள் செல்வதற்கு முன்னாள் தன் நாலுகால் பாய்ச்சலில் கதவுக்கு அருகே நின்று வெளியே வந்து இருப்பது யார் என்று அறிந்து தன் வாலை ஆட்டியது பவளா.
கதவை திறந்து விட்டு,
"அப்பப்பா...இது என்ன சார், அடுத்த சிலையா? ஒரு நாள் ஆராய்ச்சினு ஒரு எகிப்து மம்மியை வீட்டுக்கு அழைச்சிட்டு வர போறிங்க, அப்புறம் தான் இருக்கு கூத்து", என்ற படி சிரித்தாள் குமரி தன் கணவனை கண்டு.
அவனைக் கண்டதும் தன் காலால் அவனிடம் எழும்பி கொஞ்சியது பவளா.
"பவளா, கீப் கொய்ட்!!" என்றபடி தன் அலுவலக அறை நோக்கி தன் கையில் இருந்த சிலை போன்ற பொருளை அங்கு உள்ள மேஜையில் வைத்தான் ஆதவ்.
பின்னால் வந்து அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள் குமரி, "மார்னிங் லர்ந்து சாருக்கு எவ்ளோ நேரம் வெயிட் பண்றது, சாப்பிட வாங்க", என்று அழைத்தாள்.
"வரேன், ஆமா, குமரன் ஸ்கூல் போய் விட்டானா?", என்றான் ஆதவ்.
"போய்ட்டான், காலைல எழுந்து உங்களை தேடினான்". "நீங்கதான் உங்க முகத்தை கூட காட்டாம, காலையே அவசரம்னு ஆபிஸ் போயிட்டீங்க, அவன் ஸ்கூல் நீங்க வந்து உங்க பையனை கொஞ்சுற வரைக்கும் ஓபன்ல இருக்குமா என்ன?",என்றாள்.
"என்ன பண்ணறது டி, நம்ம மகாபலிபுரத்தில் கடலுக்கு அடியில் ஏதோ சிக்கியதாம், அது என்னவா இருக்கும், பாக்கனும்னு உடனே வர சொல்லறாங்கனு பார்த்தா, மேலிடத்தில் ஒரே பிரஷ்சர், இதை கையோடு நீங்க உங்க வீட்டுக்கே கொண்டு போய் ஆராய்ச்சி பண்ணி, ஈவினிங்க்குள்ள அப்டேட் சொல்லுங்கனு இந்த சிலையை கையில் கொடுத்துட்டாங்கடி", என்றான் மத்திய தொல்லியல்துறையில் பணி புரியும் ஆதவ்.
"எல்லாம் சரி, நீங்க சாப்பிட்டு வந்து உங்க வேலையை ஸ்டார்ட் பண்ணலாமே சார்", என்றபடி நகர்ந்தாள் குமரி.
"இதோ வரேன்", என்று அவன் அந்த சிலை போன்ற கல்லை தன் செல்போனால் வித வித கோணத்தில் படம் எடுத்து விட்டு அப்படியே பார்த்த படி நின்றான், "இன்னுமா வரவில்லை சாப்பிட", என்று குமரியின் குரல் கேட்டு டைனிங் டேபிள் நோக்கி நடந்தான் ஆதவ்.
அந்த சிலை போன்ற கல்லில் இருந்த சிதைந்த நிலையில் உள்ள கை போன்ற அமைப்பில் இருந்த அந்த நீலக்கல் மோதிரம் மின்னியது.
- முற்றும்.




பின் குறிப்பு: குமரி கண்டம் தமிழர்கள் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று, அதனை உண்மையில் இருந்ததா? வெறும் கற்பனையா? என்றெல்லாம் அதனை சுற்றி ஏராளமான வதந்திகள், இறையனார் அகப்பொருள் உரையில் (பெயர் தெரியாத) பாண்டிய மன்னன் ஒருவனால் இது குமரிக் கண்டம் ஆளப்பட்டது என்றும் குறிப்பிட பட்டுள்ளது.
























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































Comments

  1. அருமையான கதை சகோதரி வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மஞ்சள் ரோஜா

தாமரை