தாமரை
"ஸ்ஸ், அப்பாடா!!!", என்று வியர்வை வழிந்த முகத்தை துடைத்துக் கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்தேன் நான்.
"அப்பா என்ன கூட்டம் பாரு சகலை, வாரம் இறுதினா போதும், கோயம்பேடு குவிஞ்சிபுடுதே, இதை பார்த்தால், இங்கே இருக்குறவங்க முக்கால் வாசி பேர், வெளியூரில் இருந்து பொழைக்க வந்த நம்மள மாதிரி பயலுவ தான் போல , இந்த மாதிரி எல்லா ஊர் பயலுவலையும் கொஞ்சம் கொஞ்சம் வச்சிகிட்டு, இருக்குறதிலே பெருமையான, பெரிய ஊரு மெட்ராஸ்னு பவுசு காட்டுறாங்க",
"அதை சொல்லு சகலை , நம்ம ஊரு காவிரி ஆத்து தண்ணி முன்னால் இந்த மெரினா எடுபடுமா", கறிவேப்பிலையை வெலை குடுத்து வாங்குறாய்ங்க", நம்ம ஊரில் கொல்லைக்கு கொல்லை கிடக்கும், இங்க ஒரு கொத்து அம்பது ரூவாயாம்ல!!!!",
"ஹே அப்பு, செத்த இருங்கப்ப்பா...உன் ஊரில் கறிவேப்பிலை கொட்டிக் கிடக்கு, சரிதான், உன் ஊரு அம்புட்டு பெரிய ஊரு தான், அப்புறம் எதுக்குப்பு இங்கே வந்த?, உன் ஊரில் ஆயிரம் கொட்டிக் கிடந்தாலும், பொழைப்புக்கு இங்க தானே வர மாதிரி இருக்கு, இங்கே உனக்கு குடுக்குற சம்பளத்தின் அளவ அதே வேலைக்கு உன் ஊரில் நீ வாங்கிட முடியுமாப்பு, இப்போ நீ சம்பாத்திக்குற சம்பாத்தியம் உன் ஊரிலே இருந்து காவிரி ஆத்து பெருமை பேசிக் கொண்டு இருந்தால் கிடைக்குமா அப்பு?",
என்று எனக்கு அருகில் இருந்த இரு இருக்கைகளில் நடந்துக் கொண்டு இருந்த வழக்கு கேட்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.
அவர்களை போல் நானும் சோழ நாடு, காவிரி தன் கரங்கள் கொண்டு முத்தமிடும் ஊரு என் ஊரு அப்படினு பெருமை பேசிக் கொண்டு கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் ஆட்டம் போட்டவன் தான்.
"ம்ம்...வாழ்க்கைக்கு எத்தனை முகங்கள்...காவிரி கரை விட்டு வர விருப்பம் இல்லாதவனை காவிரியை விட்டு பல தூரங்கள் தள்ளி இருக்க வைத்து விட்டது இந்த வாழ்க்கை".
"மம்மி.., அந்த சோட்டா பீம் போட்ட ஜுஸ் வாங்கி குடு",
" இப்போ தான ரெண்டு வாங்கி குடுத்தன், பேசாம வா", என்று சீட்டை கடந்து சென்ற தாய், மகளின் உரையாடல் கேட்டதும்,
"அடேய், சரவணா!!! உன்னை என்ன அந்த ஆத்தங்கரைக்கே நேர்ந்து விட்டுடனா? ஒழுங்கா இங்க வரலனா, முதுகு பழுத்துடும்", என்று அருகில் இருந்த பூவரசம் மரத்தில் இருந்து கிளையை ஒடிக்கும் அம்மாவின் நினைவுகளை கலைத்தது என் செல்போனின் ஒலி.
பாரதி அழைக்கிறாள் என்றது.
"சொல்லு பாரதி",
"என்னங்க பஸ் எடுத்துட்டு டாங்களா?", வீக் எண்டு வேற, கூட்டமா இருக்கா?",
"ஆமாம் பாரதி...அவசரத்திற்கு முன்பதிவும் செய்ய முடியல, சீட் கிடைத்ததே பெரிய விஷயம்", துளசி சாப்பிட்டு விட்டாளா?",,
"
"சாப்பிட்டாள், அவளுக்கு மட்டும் ஆன்லைன் கிளாஸ் டெஸ்ட் இல்லனா நானும் உங்களுடன் வந்து இருப்பேன்..சரிங்க, பஸ் கிளம்பின உடனே எனக்கு கால் பண்ணுங்க, மறக்காம சாப்படுங்க...நீங்க இருக்குற மைண்ட் செட்டில் சாப்பிடாமல் இருக்காதீங்க.."
"ம்ம்..என்ற முணு முணுப்புடன் போனை அணைத்தேன். "நான் இருக்கும் மைண்ட் செட்..", துயரத்துடன் என் கையை பார்த்தேன், அதைக் கண்டதும் என் கண்களில் இருந்து நீர் வழிந்தது. அக்கம் பக்கம் பார்க்க போகிறார்கள் என்ற நினைவில் கண்களை துடைத்தேன்.
"டிக்கெட்..டிக்கெட்....",
என்ற நடத்துநர் குரல் கேட்டு, உயிர் இல்லாத குரலில் "கும்பகோணம் ஒன்னு", என்று பணத்தை நீட்டினேன்.
" எத்தனை மணிக்கு சார் கும்பகோணம் போகும்", என்ற எனக்கு முன் இருக்கையில் அமர்ந்து இருந்த அம்மாளின் கேள்விக்கு
"சாய்ந்தரம் அஞ்சு மணிக்குலாம் போயிடும்மா, அஞ்சு மணிக்கு முன்ன பின்னவும் ஆகலாம், என்ற பதிலை சொல்லி விட்டு, "டிக்கெட்..டிக்கெட்", என்று நகர்ந்தார் நடத்துநர். ஓட்டுநர் பேருந்தை கிளப்பினார்.
"மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..!
இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை..!
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..!
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ..!
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
எச கேட்டாயோ...!
அடி ஆத்தாடி இளமனசொன்னு
றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி.."
என்று ஜானகியும் இளைய ராஜாவும் உங்கள் பயணத்தை என் பாட்டுடன் இனிமையாக அனுபவித்து கொண்டு தான் போக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாடிக் கொண்டு இருந்தார்கள்.
பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அந்த பல ஊர் பேருந்துகளுக்கு எல்லாம் டாடா காட்டி கொண்டு நகர்ந்தது. பாரதிக்கு பண்ணி
ஃபோன் பஸ் கிளம்பி விட்டதாக சொன்னேன்.
அருகில் உள்ள இருக்கைகளில் அந்த இரு காவிரி மண்ணின் மாந்தர்களில் ஒருவன் தன்னிடம் இருந்த மினரல் பாட்டில் தண்ணியை குடித்து விட்டு, " பாரு சகலை, நம்ம காவிரியாத்து தண்ணி குடிக்க குடிக்க தேன் மாதிரி தித்திக்கும்... இந்த மாதிரி பாட்டில் தண்ணியை குடிக்கிற இந்த மெட்ராஸ்காரங்களுக்கு எப்படி தெரியும்..?, ஆத்து தண்ணியை குடித்து இருப்பாங்களா?", என்று வழக்கு பேசிக் கொண்டு இருந்தான்.
அதைக் கேட்ட எனது மனம் மீண்டும் காவிரி ஆற்றை நோக்கி போனது.
"டேய் சரோ...வெளியே வாடா, நம்ம காவிரி ஆத்தில நெறய தண்ணி போகுதாம், நம்ம செக்கு மாமா பெரிய முதலையை கூட ஆத்து தண்ணியில பார்த்தாராம்", என்ற சீனியின் குரலில் உள்ளே சாப்பிட்டு கொண்டு இருந்த நான் சாப்பாட்டை விட்டு எழுந்து அவசர அவசரமாக அவனின் சைக்கிளில் தொத்திக் கொண்டு ஆற்றை நோக்கி விரைந்தேன்.
"டேய் சீனி கடன்காரா! அவனை கெடுக்குறதே நீதான்டா, இரு பார்வதி கிட்ட சொல்லி உன்னை தோலை உரிக்க சொல்றேன்", என்று என் அம்மாவின் குரல் காற்றில் கலந்து எங்கள் காதில் விழ, நான் அதை அலட்சியப் படுத்த,
சீனி,
"டேய் சரோ..அத்தை நிஜமாவே அம்மாகிட்ட சொல்லிடுமா?", என்றான் சீனி என்கிற சீனிவாசன், அவன் என்னுடைய மாமாவின் மகன் என்று சொல்லுவதை விட, எனது உயிர்த் தோழன் என்று சொல்லுவதே சிறந்தது, ஏனென்றால் நான் இருக்குமிடம் எல்லாம் அவனும் இருப்பான், அவன் இருக்குமிடம் எல்லாம் நான் இருப்பேன்.
"அதெல்லாம் ஒன்னும் சொல்ல லாது, நீ முதலில் வேகமா பெடலை போடுடா", என்ற படி இருவரும் காவிரி ஆற்றை நோக்கி ஓடினோம்.
அங்கு நுரை பொங்க ஆவலாக, ஆடி மாதத்தில் ஆர்ப்பரித்து வந்து கொண்டு இருந்தாள் காவிரி.
நானும் சீனியும், எங்கள் சோட்டு நண்பர்களுடன் சேர்ந்து காவிரியில் ஆசை தீர குளித்து நேரம் போவது தெரியாமல் நாள் முழுவதும் ஆட்டம் போட்டதில், வீடு மறந்து போக, மாலை வேளையில் மீசையை முறுக்கிய படி, விறைப்புடன் கரையில் வந்து நின்றார் என் அப்பா. ஊரின் முக்கியஸ்தர் அவர். அவரைக் கண்டதும் சீனியிடம் கண்ணை காட்டிவிட்டு, ஆற்றில் இருந்து கரை ஏறி, அவர் புல்லட்டில் அமர்ந்தேன்.
செல்லும் வழியில் சீனியின் அம்மா கையில் பிரம்புடன் ஆத்தை நோக்கி சென்று கொண்டதை கண்ட நான், அம்மா சொல்லி விட்டாள் போல என்று எண்ணிக் கொண்டு, சீனியின் நிலை எண்ணி பரிதாபட்டேன்.
ஆனால், வீட்டிற்கு சென்ற என்னையும் கையில் குச்சியுடன் வரவேற்றாள் என் அம்மா, அன்று அவள் அடித்த அடியில் அப்பாவே பயந்து விட்டார், அன்றில் இருந்து காவிரிக்கு முழுக்கு போட்டு விடுவான் என்று அவர்கள் நினைத்தது தான் நடக்கவில்லை, அடுத்த நாளே காவிரியின் முகத்தில் தான் விழித்தேன் சீனியுடன்.
பாம், பாம், பாம்...
என்று என்னை சுற்றி வித விதமான வாகன இரைச்சல் கேட்டு நினைவுகளில் இருந்தே வெளியே வந்த நான் கண் விழித்தேன்.
"எப்போ பார்த்தாலும் இந்த பெருங்களத்தூர் வந்தாலே, ஒரே தொல்லை, வார இறுதியில் இதை கடந்து போகவே ரெண்டு மணிநேரம் ஆகுது", அவ்ளோ டிராபிக்,ச்சை", என்று எரிச்சல் தொனிக்கும் குரல் ஒன்று பின்சீட்டில் இருந்து வந்தது.
கண் திறந்து சன்னல் வழியே பார்த்தேன், அங்கும் இங்குமாக கூட்டம் கூட்டமாக பைகளை கையில் எடுத்துக் கொண்டு, தான் முன்பதிவு செய்து இருந்த, முன்பதிவு செய்யாது, எப்படியும் இங்கு நிறைய வெளியூர் செல்லும் பேருந்துகள் நிற்கும், அதில் ஏதாவது ஒன்றில் ஆவது தனக்கு சீட் கிடைக்காமலா போய்விடும்? என்று பலவித எண்ணங்களுடன் பலர் வெளியூர் பேருந்துகளை எதிர்பார்த்து நின்றுக் கொண்டு இருந்தனர்.ஒருவழியாக பேருந்து புறப்பட்டது.
மறுபடியும் புதிதாக பெருங்களத்தூரில் ஏறியவர்களிடம் டிக்கெட் போட நடத்துநர் தயாரானார். சன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தேன், எதோ ஒரு கோவில் கடந்து போனது, சிக்னல் விழுந்ததால் அங்கு பேருந்து சிறிது நேரம் நின்றது. அப்போது அங்கு உள்ள ஒரு பூக்கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த தாமரை பூக்களை ஒரு பெண் எடுத்து பார்த்துக் கொண்டு விலை பேசிக் கொண்டு இருந்தாள்.
அதை பார்த்ததும் எனக்கு "அவளின்" நினைவு வந்தது.
நானும் சீனியும் எப்படியே உருண்டு பிரண்டு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டோம்,ஆனாலும் காவிரி ஆற்றங்கரையில் ஆடிப் பாடுவதை விடவில்லை, சிறுவயதில் அடித்து பார்த்த பெற்றோர், நாங்கள் எப்போதும் காவிரி ஆற்றங்கரையிலே கிடப்பது கண்டு, இருவரும் நிச்சயம் பத்தாம் வகுப்பை தாண்ட மாட்டோம் என்று அப்பா ஆசிர்வாதம் மனதார வழங்கி விட்டார், அம்மாவோ ஒரு படி மேலே போய் தன் அண்ணனின் பலசரக்கு கடையில் சேர்த்து விட முயன்றார். இந்நிலையில் பத்தாம் வகுப்பும் தேர்ச்சி பெற்று பன்னிரெண்டாம் வகுப்பும் தேர்ச்சி பெற்று விட்டோம், அதில் இருந்து நான் ஆற்றை நோக்கி சென்றால் யாரும் தடுப்பது இல்லை. நானும் சீனியும் கும்பகோணத்தில் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தோம், கல்லூரி சென்றாலும் விடுமுறையை கழிக்க, எப்போதும் அதே ஆறு தான், காலையில் அந்த ஆற்றில் ஓரத்தில் பூத்து இருக்கும் தாமரைகளும், அங்கு நிற்கும் நாரைகளும், அதை ஒட்டிய பெருமாள் கோயிலும், ஆற்றுக்கு நீர் எடுக்க வரும் பெண்கள் கூட்டமும், குளிக்க வரும் காளையர்கள் கூட்டமும், என்று எப்போதும் களையாக இருக்கும் அந்த ஆறு.
முதலாம் ஆண்டு முடித்து விடுமுறையில் நானும் சீனியும் வழக்கம் போல, காலையில் ஆற்று படிக்கட்டில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம், அப்போது தான் அவளை பார்த்தேன், அவளை முதல் முதலில் பார்த்த நாள் இப்போது வரைக்கும் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்து இருக்கிறது. நீல வண்ண பாவாடை தாவணி உடுத்தி, காதில் அவள் நடக்கும் போது, அவளின் ஜிமிக்கியும் சேர்ந்து ஆடியது, அவளின் மாநிறமே பெருமாள் கோவிலில் இருந்து எதோ ஒரு பெண் சிலை எழுந்து வந்தது போல இருந்தது, பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது, தன் தாவணியை எடுத்து இடுப்பில் செருகி, குடத்தில் நீர் மோர்ந்தாள், பிறந்ததில் இருந்து நான் பார்த்த அந்த காவிரி ஆறு, அன்று எனக்கு புதிதாக, வெகு அழகாக தெரிந்தது, மல்லிகை பூ வைத்து நீண்ட பின்னலாட, கூட வந்த பெண்களுடன் பேசிக் கொண்டு குடத்தை சுமந்த படி நடந்தாள்.
என் முகத்தை பார்த்து என் நினைப்பை புரிந்துக் கொண்ட சீனி,
"சரோ, அந்த பொண்ணு, நம்ம செக்கு மாமா வீட்டுக்கு விருந்தாளியா வந்து இருக்குடா, இங்கே ஒரு பொம்பளை புள்ளைங்க மட்டும் படிக்கிற காலேஜ் இருக்குல அங்க தான் சேர்ந்து இருக்காம்",என்றான்.
அதை கேட்டுக் கொண்டே அவளை பார்த்தேன், அவள் என் பார்வையில் இருந்து மறைந்து போய் விட்டாள்,
சீனிக்கு வடமொழி உச்சரிப்பு சரியாக வராது, "ஷா"வை, "சா" என்பான், "ஜெ" வை, "செ" என்பான்.அவன் சொல்லும் அந்த ஜெக்கு என்கிற ஜெகன்நாதன் மாமா பக்கத்து ஊரு, ஆற்றுக்கு மறு பக்கம் உள்ள ஊரான நாச்சியார் கோவில், அது தான் சீனியின் ஊரும் கூட, அவன் சொல்லும் அந்த செக்கு மாமாவின் வீடு அருகில் தான் சீனியின் வீடும்.
அவள் போய் விட்டதை அறிந்த நான்,
"டேய் சீனி, சைக்கிளை எடுடா, உங்க வீட்டுக்கு போலாம்",
"என் வீட்டுக்கு எதுக்குடா?", என்று கேட்ட சீனி, "ஓ கதை அப்படி போதா", என்றபடி அவன் சைக்கிளை எடுத்து, புயல் வேகத்தில் மிதித்தான், மூச்சு இறைக்க இருவரும் சென்றால், அதற்குள், அவளே வீட்டுக்குள் போய் விட்டாள் போல, ஏக்கத்துடன் பார்த்த படி நின்றேன்.
ஜெகன்நாதன் மாமா தன் முறுக்கு மீசையை முறுக்கிய படி வெளியே வர, என்னுடன் சேர்ந்து நின்று அவள் வெளியே வருவாளா என்று பார்த்த கொண்டு இருந்த சீனி , அவரைக் கண்டதும் பயந்து உள்ளே ஓடி விட்டான், என்னை யதார்த்தமாக பார்த்த ஜெகன்நாதன் மாமா, என்னை அழைத்து, என் படிப்பை பற்றி விசாரித்து கொண்டு இருந்தவர், வீட்டின் உள்ளே பார்த்து,
"ஹே தாமரை, தம்பிக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வாமா",
என்றார்.
அட...அவ பேர் தாமரையா? அவளே தாமரை மாதிரி தான் இருக்காள், அட! சரவணன் - தாமரை, எவ்ளோ பொருத்தமா இருக்கு"
"அட!! என்ன தம்பி கண்ணை திறந்து கிட்டு டே கனா காணுறீங்க", காபி எடுத்துக்கோங்க",என்று தன் மீசையை தடவிக் கொண்டு அந்த செக்கு மாமா சிரிக்க, என் உணர்வுக்கு வந்தேன்,
அதைக் கண்டு அவள் இதழ் பிரியாமல் சிரித்துக் கொண்டு, காபியை கொடுத்து விட்டு, உள்ளே ஓடினாள்.அவள் ஓடும் போது அவள் கைகளில் ஆடிய கண்ணாடி வளையல்கள் சத்தமும், அவள் கொலுசின் சத்தமும் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
எங்கு பார்த்தாலும் அவள் முகமும், அவள் வளையல்கள் சத்தமும், கொலுசின் சத்தமும் எனக்கு தெரிந்தது, வீட்டிற்கு சென்ற பின் தனியே வெட்ட வெளியை பார்த்து சிரித்தேன், கனவில் அவளைக் கண்டு தூக்கத்தில் உளறினேன், அம்மா பயந்து போய்,கருப்பு கோயில் பூசாரியிடம் அழைத்து சென்று வேப்பிலை எல்லாம் அடித்தார்.
என் அருகில் அமர்ந்து இளைஞன் ஒருவன், ரகசிய குரலில் பேசிக் கொண்டே வந்தான், முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது, இடையில் நான் அவன் பேச்சை கவனிக்கிறேனா என்று எண்ணி என்னை நோக்கி அடிக்கடி ஓரப்பார்வை வீசினான், பாவம், அவனுக்கு எதற்கு என்னால் சிரமம் என்று நான் தூங்குவது போல கண்ணை மூடிக் கொண்டேன், என் நினைவுகள் மீண்டும் அவளை நோக்கியும் போக, எனக்கு டெலிபோன் சம்பவம் நினைவுக்கு வந்தது.
எங்கள் ஊரில் ஒரு சிலர் வீட்டில் தான் டெலிபோன் இருக்கும், என் வீட்டில் உண்டு, ஒரு நாள் அம்மாவும் அப்பாவும் வெளியே சென்று விட, சீனி எப்படியோ செக்கு மாமா வீட்டு டெலிபோன் நம்பரை கண்டு பிடித்து விட்டான், சீனி, வெளியே காவலுக்கு நிற்க, பதட்டத்துடன் வியர்வை பெருக ஃபோன் போட்டேன், முதலில் இரு தடவை பயம் காரணமாக செக்கு மாமா போனை எடுக்க, ஒன்றும் பேசாமல் வைத்து விட்டேன்,
ஆறாவது முறை, அவள் எடுத்தாள், அதை உடனே செக்கு மாமா வாங்கி,"யே யாருடா நீ, போலீஸ்ல சொல்லிடுவேன்" என்று ஆரம்பித்து, வாய்க்கு வந்தபடி பேசிவிட்டார்.
அடுத்த இரு நாள் கழித்து ராஜிவ் காந்தி மறைவால் திடீர் என்று பேருந்துகள் நிறுத்த பட, யதார்த்தமாக சீனியை பார்க்க அப்பாவின் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றேன்,
செக்கு மாமா பதற்றமாக அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார்.
என்னை கண்டதும், பதற்றதுடன் அருகில் வந்து,
"சரவணா தம்பி!!! காலையில் தாமரை டவுனுக்கு தையல் கிளாஸ் போனுது, இப்போ திடீர்னு பஸ்சை நிறுத்திட்டாங்க, எனக்கு என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல, என் வண்டியை வேற, ரமேஷ் பக்கத்து ஊருக்கு அவன் சிநேகிதனை பார்க்க எடுத்துட்டு போயிட்டான், உங்களால் போய் தாமரையை அழைத்து கிட்டு வரமுடியுமா?",என்று கேட்க,
மறுக்க முடியாமல் மகிழ்ச்சியை மனதில் மறைத்துக் கொண்டு எங்கோ இருந்து என் தோளில் சிறகுகள் முளைக்க, புல்லட்டில் சிறகடித்து பறந்தேன்.
என்னை கண்டதும் தயங்கினாலும், செக்கு மாமா சொன்னது சொல்ல, என் வண்டியில் ஏறிக் கொண்டாள்.
என் வீட்டுக் கொல்லையில் பூத்துக் குலுங்கும் மல்லிகை செண்டு ஒன்று என் பின்னால் அமர்ந்து இருப்பது போல் அமர்ந்து இருந்தாள். படிப்பில் ஆரம்பித்து, தன் குடும்ப விவரங்கள் வரை பேசினாள் என்னிடம். படிப்பிற்காக தன் மாமா வீட்டில் இருப்பதாகவும், படிப்பு முடிந்த பின், தான் ஊருக்கு சென்று விடுவாளம்,அவளுக்கு தாமரை பூ என்றால் கொள்ளை பிரியமாம் என்றெல்லாம் சொன்னாள். அதன் பிறகு, அவள் பார்வைகளும் என் மேல் பாய ஆரம்பித்தது, எங்கள் இடையே அதிகம் பார்வை பரிமாற்றங்களும், பார்வை நலவிசாரிப்புகளும் நடந்தன. எனக்காகவே இப்போது எல்லாம் ஆற்றங்கரைக்கு நீர் எடுக்க வந்தாள். எங்கள் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சீனியின் காவலில் நன்றாக ஆற்றங்கரையில் வளர்ந்தது.
"ஓ.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே...
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று....
ஆ.. ஆஹா.. ஆஹா.. கொத்து மலரே..
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று..
இது தீயின் ஊற்று....
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்...
புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்...
அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்....
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே..."
பாடல் இனிமையாக பேருந்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.அந்த மதிய வேளையிலும் பேருந்தில் ஏறக்குறைய அனைவரும் நித்திரையில் ஆழ்ந்து இருந்தனர். எனக்கு அந்த பாடலை கேட்டதும் தாமரையின் நினைவுகள் மனதில் மேலே எழுந்தன,
மனதில் கண்களை மூடிக் கொண்டு, ஆற்றங்கரை நோக்கி சென்றேன். அவளை பார்க்க போகும் போதெல்லாம் மூச்சை நிறுத்தி, நீரில் இறங்கி தாமரை பூவை பறித்து கொண்டு தான் செல்வேன்.
என் கையில் உள்ள மலர்ந்த தாமரையை பார்த்து முகம் மலரும் அவளின் தாமரை போன்ற முகத்தை பார்க்கும் போது, அதற்காக எத்தனை கஷ்டம் வேண்டுமானாலும் படலாம் என்று தோணும்.
"பஸ் பத்து நிமிஷம் நிக்கும், பாத்ரூம் போறவங்க போலாம்",
என்று நடத்துநர் குரல் கேட்டு நினைவுகளில் தற்காலிகமாக இருந்து வெளியே வந்தேன். பேருந்து நின்றது.
மனம் இருக்கும் நிலையில் எனக்கு சாப்பிட தோணவில்லை.
"பண்ருட்டி கொய்யா...
பண்ருட்டி கொய்யா..., கால் கிலோ முப்பது, அரைகிலோ அறுபது"
என்று குரல்கள் காதில் ஒலித்தன.அங்கு அருகில் இருந்த கடையில் பழங்கள் விற்றுக் கொண்டு இருந்தார்கள். கொய்யா குண்டு குண்டாக பார்ப்பவரை சுண்டி இழுத்தது.
"அட என்ன தம்பி நீ...என் ஊரில் ஒரு ஒரு கொல்லையிலும் உள்ளே புகுந்த, பறிக்க பை பத்தாது, நீ என்னனா யானை விலை சொல்லுற",என்ற குரல் கேட்டு திரும்பினேன், நான் நினைத்தது சரி தான், அதே காவிரி சகலை தான்.
"அப்போ போயி உன் தோட்டத்தில் பறிச்சி தின்னு, இப்போ நகரு",
"பொடி லாம் போட்டு நறுக்கி வச்சி இருக்க, வாங்கலாம்னு பார்த்தா
அட என்ன தம்பி இப்படி கோவ படுற? தம்பிக்கு எந்தூறு?",
"நமக்கு இங்கே தான்", எவ்ளோ போட?",
இந்த சம்பாஷனையை பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு, மனதில்
செண்பகம் அக்காள் நினைவில் வந்தாள். அவள் வீட்டில் ஒரு பெரிய கொய்யா மரம் உண்டு, மரம் முழுவதும் எப்போதும் காய்த்துக் குலுங்கும், நாங்கள் எல்லாம் உரிமையாக அதில் ஏறி பழம் பறிப்போம்.
ஒரு முறை நான் கல்லூரி சுற்றுலாவிற்கு ஒரு வாரம் சென்று இருந்தேன், எல்லாருக்கும் நிறைய பொருட்கள் வாங்கி கொண்டு என் தாமரைக்கு ஒரு புடவை கூட எடுத்து வந்தேன்.
தனக்கு கொய்யா பழம் வேண்டும் என்று சுற்றுலா செல்லும் முன்பு கேட்டாள் என் தாமரை, அதனால் பேருந்தில் இருந்து இறங்கிய உடன், நேரே செண்பகம் அக்காள் வீட்டுக்கு போயி மரத்தில் பழம் பறித்துக் கொண்டு என் வீட்டுக்கு போனேன்.என் கையில் பழத்தை பார்த்துக் கொண்டே என்னை கண்டு வெளியே வந்தார் என் அம்மா,
"என்னம்மா! யாருமே செண்பகம் அக்கா வீட்டில் இல்லை?",
"இந்த பழம் முதலில் ஏதுடா?",
"நான் தான்ம்மா செம்பா அக்கா வீட்டில் போய் பறித்தேன்",
"அதை முதலில் கீழே போடுடா?", இனிமே அந்த மரத்து பக்கம் போனா, உன் காலை ஒடிச்சு அடுப்பில் வைத்து விடுவேன்",
"ஏம்மா?"
"அந்த செண்பகம் நாலு நாளுக்கு முன்னாடி அதுல தூக்கு போட்டு செத்துட்டாள்",
அதன் பிறகு அம்மா, என்னை முடிக் கயிறு கட்டி விட்டு, ஆத்தங்கரை சென்று தாமரை கூட பார்க்க விடாமல் செய்தது.அதிலிருந்து கொய்யா பழத்தை பார்த்தாலே செண்பகம் அக்கா நினைவு தான்.
"சார், சார்!!!! பஸ்சை எடுக்க போறோம்...உள்ள வாங்க!!!",
என்று என்னை நோக்கி வந்த நடத்துநர் குரல் என்னை கலைக்க, பேருந்தில் ஏறி அமர்ந்தேன், பேருந்து நகர ஆரம்பிக்க, மனம் நினைவுகளின் கனம் தாங்காமல் கனக்க ஆரம்பித்தது. சன்னலில் தொங்கி கொண்டிருந்த திரையை மீறி முகத்தில் வெயில் பட்டது, திரையை இழுத்து விட்ட என் கண்கள் என் கையை நோக்கி போனது.
அன்று தாமரைக்கு பிறந்த நாள், நான் வாங்கி குடுத்த புடவையில் அம்சமாக இருந்தவளிடம் வழக்கம் போல நான் அவளுக்கு பிடித்த தாமரை பூவை நீட்டினேன்.
"நீங்க ரொம்ப கஞ்சம், இன்னக்கி என் பிறந்த நாள், இன்னக்கும் தாமரை பூ தானா?",
என்றாள் பொய்யான சிணுங்கலுடன்.
"இல்லை, இன்னொன்னு கூட இருக்கு",
"என்ன அது?",
"அதுவும் தாமரை தான்"
"அவ்ளோ தானா?",
"இந்த தாமரை உனக்கு பிடிக்கும்",
என்ற படி தாமரை என்று பச்சை குத்த பட்டு இருந்த என் கையை நீட்டினேன் அவளை நோக்கி.
"என் பேரு!!!!",
என்று அழுகை கலந்த அவளின் சந்தோஷ குரல் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது இன்னமும். அதை எனக்கு அழிக்க மனம் இல்லை இன்னும்.
பேருந்து திருவிடைமருதூர் தாண்டி போய் கொண்டு இருந்தது, அந்த ஊரின் பெயர் பலகையை கண்டதும் உடலில் ஒரு சிலிர்ப்பு வர நிமிர்ந்து அமர்ந்தேன்.
ஒருநாள் அம்மா என் கையில் உள்ள பெயரை பார்த்து விட்டார், அன்று தான் முதன் முதலில் நான் அம்மாவை மறுத்து பேசினேன், தனக்கு அவள் மருமகளாக வரக் கூடாது, வந்தால் நானும் என் அப்பாவும் விஷம் அருந்தி இறந்து விடுவோம் என்று மிரட்டினார்கள்.
அதற்கு பதில் சொல்லாமல் மனம் வலிக்க காவிரி ஆற்றை நோக்கி சென்றேன், தண்ணீர் குடம் எடுத்துக் கொண்டு தாமரை வந்து கொண்டு இருந்தாள். அவள் முகத்தில் ஐந்து விரல்கள் பதிந்து இருந்தன, அழுது இருப்பாள் போல, முகம் கலங்கி சிவந்து இருந்தது. செக்கு மாமா அடித்து இருப்பார் போல, எல்லாம் அப்பா, அம்மா வேலையாக தான் இருக்கும். என்னை சோகமாக ஒரு பார்வை பார்த்தாள்,அந்த பார்வை!!!!! இன்னும், இதற்கு மேலும் என் காலம் முடியும் வரை என் நெஞ்சில் நிற்கும் அந்த பார்வை. நான் மௌனமாக ஆற்றை நோக்கி குதித்தேன், தாமரை பூக்கள் மலர்ந்து இருந்த இடம் நோக்கி நீந்தி தாமரை பூவை பறித்து அவளிடம் ஏதும் பேசாமல் நீட்டினேன். எப்போதும் அதை வாங்கும் போதும் அவள் முகத்தில் மலரும் அந்த சிரிப்பு அன்று இல்லை, மாறாக விசும்பி கொண்டே வாங்கியவளிடம்,
"இப்போ எதுக்கு அழுதுகிட்டு இருக்க? நம்ம சீனியோட பிரண்டு ஒருத்தன் திருவிடைமருதூர்ல இருக்கான்,
நீ ராத்திரி கிளம்பி ஆத்தங்கரைக்கு வா, பேக்லாம் எதும் வேணாம், நம்ம அங்க போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்கும் சென்னையில் வேலை கிடைத்து இருக்கு, நாம அங்க போய் சந்தோஷமா வாழலாம் சரியா?",
என்ற என் குரலுக்கு பதில் சொல்லாமல் தலை ஆட்டிய படி கிளம்பியவள், தன் தலை மறையும் வரை என்னை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே போனாள்.
அது எனக்கு என்னவோ செய்தது. அன்று
இரவு நானும் சீனியும் ஆத்தங்கரை யில் காத்துக் கொண்டே இருந்தோம் அவள் வரவில்லை, விடிந்தது தான் மிச்சம். சீனி செக்கு மாமா வீட்டை போய் பார்க்க, அங்கு வீடு பூட்டி இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அவளை நினைத்து, கையில் உள்ள அவளின் பெயரை பார்த்து கொண்டே இருந்தேன், அப்போது சீனி மூச்சு இறைக்க ஓடி வந்து சொன்னான்,
"டேய் சரோ...மனசை தேத்திக்கோ..தாமரைக்கு கல்யாணம் ஆகிட்டாம்டா, நேத்து, ராத்திரி அவங்க ஊருக்கு போயிட்டாளாம், நம்ம செக்கு மாமா பையன் ரமேஷ் தான் மாப்பிளையாம்டா, இன்னக்கி காலையில் தான் நடந்துதாம்டா, கோயிலில்...
அதற்கு மேல் அவன் சொன்னது எதும் என் காதில் விழவே இல்லை, பைத்தியம் பிடித்தவன் போல்,
"தாமரை!!"
என்று கதறிய படி, அப்படியே ஆற்றுக்குள் பாய்ந்தேன்,அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை எனக்கு.
"கும்பகோணம் கேட்டவங்க யாருப்பா?", பேக்கைலாம் எடுத்து வச்சுக்கோங்க, ஊரு வரப்போது, என்ற நடத்துநர் குரலில் கண்ணை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தேன்.
அவள் இல்லாத வாழ்வு எனக்கு மிகவும் கொடுமையாக இருந்தது, சாவை முயற்சி செய்து பார்த்து அது வராமல் தோற்றேன், அம்மா, அப்பா முகம் பார்க்க பிடிக்கவில்லை, சென்னை சென்று என்னை வேலையில் ஈடு படுத்தி மேலே உயர்ந்து கொண்டே போனேன். ஆனால் மனம், அவள் மீது கொண்ட காதலை மறக்க மாட்டேன் என்று சொல்லி விட்டது.
அம்மாவின் மரணப்படுக்கையில், என்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி கதறினார், பாவ மன்னிப்பு கேட்டார், அவரின் இறுதி ஆசைக்காக திருமணம் செய்தேன், பாரதி...என் வாழ்வில் வந்த ஒரு தென்றல், பெண் பார்க்கும் படலம் போதே அவளிடம் முதலில் சொன்னது தாமரை மேல் கொண்ட காதலை பற்றி தான். என் உணர்வுகளை புரிந்துக் கொள்வது போல், கேட்டுக் கொண்டாள், என் கையில் உள்ள பச்சையை பார்த்து சற்று அதிர்ந்தாலும் என்னை புரிந்துக் கொண்டாள்.
அம்மா இறந்த ஆறு மாதங்களில் அப்பாவும் இறந்து விட, நான் கும்பகோணம் செல்வது அரிதாகி போனது.
காலப்போக்கில் எங்களுக்கு துளசி என்றொரு மகள் பிறந்தாள்.
நான் தாமரை என்று பெயர் வைக்க முயல,
"உங்க மேல எனக்கு அதிக காதல், எனக்கும் மனசு இரும்பு இல்லையே...,சில இடங்களில் உங்கள் முதல் காதலை நினைவு படுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்குமே", என்று என் கையை பார்த்து பாரதி லேசாக முறைத்து விட்டு, துளசி என்று பெயரிட்டாள்.
பேருந்து நிற்க, இறங்கினேன், ஊரில் காலை வைக்க, சீனி நின்றான் காருடன், தஞ்சாவூரில் இஞ்சினியராக வேலை செய்கிறான். என்னை பார்த்ததும்,
"டேய் சரோ..!!!", என்று.ஓடி வந்து கட்டிக் கொண்டான்.
"பாரதி தங்கச்சி வரலையா?",
"அவள் வரணும்னு தான் இருந்தாள், பட் பாப்பாக்கு ஆன்லைன் கிளாஸ், அதான் வர முடியலை",
"அதானே பாத்தேன், தங்கச்சி வராம இருக்குமா?",
"நீ எப்போடா வந்த, ராஜி எப்படி இருக்கா?",
"விஷயம் கேள்விப்பட்டு நான் தான் முதலில் வந்தேன், அப்படியே அவளையும், குழந்தையும் அம்மா கிட்ட விட்டுட்டு உனக்கு தகவல் சொன்னேன், எனக்கு தெரியும் எப்படியும் நீ வரவனு",
காரில் ஏறி அமர்ந்தேன், என் வாழ்க்கையில் இது மறக்க முடியாத, எப்போதும் என் இறுதி வரை நினைவில் இருக்க போகும் பயணம் இது.
அன்று காலை அலுவலகம் தயாராகி கொண்டிருந்தேன், அப்போது தான் சீனி ஃபோன் செய்தான்.
ஒருமுறை ஊருக்கு தன் கணவன் மற்றும் இரு குழந்தைகளுடன் வந்து இருந்த தாமரை ஆற்றில் நீர் எடுக்க முயலும் போது ஆற்றில் விழுந்து விட்டாளாம், அப்போது தலையில் பலமாக அடிபட்டதால் சிகிச்சை எடுத்து கொண்டு இருந்தாளாம், அது பலன் அளிக்காமல் இறந்து விட்டாளாம்",
போனை அணைக்காமல் சிலை போல் நின்ற என்னைக் கண்டு பாரதி பதறி போய் உலுக்கி, என்னிடம் பதில் வராமல் போக, அவளே போனில் தொடர்ந்தாள்.
என்னை தைரியப்பபடுத்தி, சீனியிடம் ஆயிரம் முறை சொல்லி என்னை அனுப்பி வைத்தாள் பாரதி.
கார் போய் கொண்டு இருந்தது.
ஆற்றங்கரை அருகில் வந்ததும், சீனியிடம் நிறுத்த சொன்னேன் காரை. காற்று வீசிக் கொண்டிருந்தது, வழக்கம் போல தாமரை பூக்கள் மலர்ந்து இருந்தன, நாரைகளும் இருந்தன, இயற்கை அப்படியே தான் இருக்கிறது..ஆனால் மனிதர்கள் வாழ்வில் தான் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
சடாரென்று ஆற்றில் பாய்ந்து, மூச்சி அடக்கி தூரம் போனேன்,
சீனிக்கு பயம் வந்து விட்டது,
"சரோ...டேய் சரோ!!!",கத்தினான்.
அந்த நேரத்தில் சீனிக்கு ஃபோன் செய்தாள் பாரதி. சீனியின் பதற்றம் அவனை காட்டிக் கொடுக்க அவளிடம் வேறு வழி இல்லாமல் விவரத்தை சொன்னான் சீனி.
அதை குறுக்கிடாமல் கேட்டுக் கொண்ட பாரதி,
"சீனி அண்ணா, நீங்க நினைக்கிற மாதிரி அவர் தப்பான முடிவுக்கு எல்லாம் போக மாட்டார் எனக்கு நல்லாவே தெரியும், அவருடைய முதல் காதல் இன்னும் அவர் மனதில் இருக்கு தான், இனிமேலும் இருக்கும் தான், அது ஒரு உணர்வு, மதிக்க கூடிய, பசுமையான நினைவு, ஆனால் அவர் அதற்காக அந்த முடிவுக்கு எல்லாம் போகமட்டார், இந்த பத்து வருடங்களில் அவருடன் வாழ்ந்த எனக்கு அவர் மனது என்ன நினைக்கும் என்று எனக்கு தெரியும்", என்று அவள் முடிக்க,
ஆற்றில் நனைந்து ஈரம் சொட்ட சொட்ட, கை முழுக்க தாமரை பூக்களுடன் வந்தேன் நான்.
"ஆற்றில் இன்னக்கி பூத்து இருந்த எல்லா தாமரை பூவையும் பறித்துட்டேன்", வா போகலாம்,என்றபடி,
செக்கு மாமா வீடு நோக்கி சென்றோம் இருவரும்.
நல்ல கூட்டம், அழுகை சத்தம், பூமாலைகள் மணம் என்று சாவு வீட்டுக்குரிய அடையாளங்கள் அங்கு தென்பட்டது.
"இது போல் நடந்து கொள்வதால் உனக்கு என்ன நன்மை? காலமே.... "
இதயம் வெடித்தது எனக்கு.
என் கண் முன், ஆற்றில் நீல தாவணி அணிந்து தண்ணீர் எடுக்க வந்த என் தாமரையின் முகம் வந்தது. குனிந்து கொண்டே உள்ளே போனேன், எனக்கு அவள் இறந்து போன முகம் பார்க்க முடியவில்லை, விருப்பம் இல்லை, எனக்கு அவளை நினைத்தாலே முதல் முதலில் நான் பார்த்த தாமரை தான் எனக்கு எப்பொழுதும் நினைவில் வர வேண்டும். எனவே என் கையில் இருந்த தாமரை பூக்களை மேஜையில் கிடத்தி வைக்கப் பட்டிருந்த தாமரையின் மெட்டி அணிந்த கால்கள் அருகில் வைத்து விட்டு சீனியுடன் திரும்பி பார்க்காமல் நடந்தேன்.
என்னை பொறுத்த வரை அவள் சாகவில்லை, என் மனதில் அந்த நான் முதல் முதலில் ஆற்றங்கரையில் நீல தாவணியில் பார்த்த என் தாமரையாக, என் முதல் காதலாக எப்பொழுதும் அதே வயதுடன் இறவாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்க போகிறாள்.
- முற்றும்

முதல் காதல் எப்பொழுதும் அழிவதில்லை.
ReplyDeleteஉண்மை தான், நன்றி
Delete